சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே ஓலக்கோடு என்ற இடத்தில் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏற்காடு செம்மநத்தம் அருகே உள்ள ஓலக்கோடு என்ற இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டபோது ஆரிராசன் காடு என்ற தனியார் எஸ்டேட்டில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பழங்காலத்திலிருந்தே ஆநிரைகளைக் காத்தலும், அவற்றைக் கவர்தலும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. ஆநிரைகளைக் கவர்தல் வெட்சித் திணை எனவும், அவற்றை மீட்பது கரந்தைத் திணை எனவும் புறத்திணைகளில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியம் ஆநிரைகள் தொடர்பாக எழும் போரைப் பூசல் என்று குறிப்பிடுகிறது. மக்கள் கால்நடைகளைப் பெரும் சொத்தாகக் கருதி காவல் காத்தனர். அவற்றைக் காவல் காப்பதில் ஏற்படும் சண்டையில் இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நடுகற்கள் கிடைத்த நிலையில் தற்போது ஏற்காடு அருகிலும் புதிதாக நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடுகல்லானது ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. 100 செ.மீ உயரமும், 30 செ.மீ அகலமும் உள்ளதாக நடுகல் உள்ளது. இடது பக்கம் திரும்பிய நிலையில் முகம், வலது கையில் குறுவாள், இடது கையில் நீண்ட வில்லுடன் துவிபங்க நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். கையில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்கள் இரண்டும் இடது பக்கம் திரும்பிப் போருக்கு விரைந்து செல்லும் நிலையில் வீரனது உருவம் காணப்படுகிறது. வீரனுக்கு மேல் புறமும், இடது புறமும் வட்டெழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. எழுத்தமைதியைக் கொண்டு இவை ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு என முடிவு செய்யலாம். மொத்தம் 14 வரிகளில் எழுத்துகள் உள்ளன. தமிழகத் தொல்லியல் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் ர.பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் கோவை து.சுந்தரம் ஆகியோர் மூலம் கல்வெட்டானது படிக்கப்பட்டது.
சிரிவலிகையார் எனக் கல்வெட்டு தொடங்குகிறது. மன்னர் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 7 ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் இந்தப் பகுதியானது சுதந்திரமாகச் செயல்பட்டதை இந்தக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. தகினூர் என்ற ஊர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆயளூர் என்ற ஊரைச் சேர்ந்த வீரன் ஒருவன் ஆநிரைக் கூட்டத்தை கவர வந்தவர்களுடன் போரிட்டு உயிர் இழந்துள்ள செய்தியை இந்தக் கல்வெட்டு குறிக்கிறது. அந்த வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
இந்த நடுகல்லைக் கண்டுபிடித்த ஆறகழூர் பொன் வெங்கடேசனிடம் இதுகுறித்துப் பேசியபோது, “இந்த நடுகல்லை மேலும் ஆய்வு செய்து வருகிறோம். வட்டெழுத்தை முழுமையாகப் படிக்க முடியவில்லை. மேலும், இந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் இன்னும் நிறைய நடுகற்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நடுகல்லை முறையாகப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.