உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது பித்திளிகுளம். இக்குளத்தின் அருகில் உள்ள முள்வேலியில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால கலைநயம் மிக்க வரலாற்று பொக்கிஷங்கள், கல்தூண்கள், சிற்பங்கள் ஆகியவை கேட்பாரற்ற நிலையில் புதைந்து காணப்படுகின்றன. இந்த இடத்தில் சோழர்கால கோயில்கள் புதையுண்டு இருக்கலாம். எனவே, இந்த இடத்தை தொல்லியல் துறை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரமேரூர் பல்லவர்களால் திட்டமிடப்பட்டு சோழர்களால் மெருகேற்றப்பட்டு வளர்ந்த தொன்மையான வரலாற்று சிறப்பு மிக்க ஊர். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் உத்தரமேரூரை ஆட்சி செய்துள்ளனர். இதன் அடையாளமாக இப்பகுதியில் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. உத்தரமேரூர், எண்டத்தூர் சாலையில் உள்ள பித்திலிகுளம் அருகே ஒரு முட்புதர் இருக்கிறது. இந்தப் புதர்பகுதியில் பிரம்மா, விஷ்ணு துர்கை, ஜேஷ்டா தேவி உள்ளிட்ட சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுடன் சில கல் தூண்களும், சிற்பங்கள் அடங்கிய கற்களும் இருக்கின்றன. இங்குள்ள சிலைகளில் ஒன்று உடைந்த நிலையில் தலைப் பகுதியுடனும், இரு சிலைகள் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையிலும் இருக்கின்றன.

கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மூன்று சிலைகளில் முதலாவது உள்ளது ஜேஷ்டா தேவி சிலையாகும். இதற்கு தவ்வை மூத்தோள் உள்ளிட்ட 14 பெயர்கள் உள்ளன. சங்க இலக்கிய நூல்களிலும், திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர்களும் தவ்வை குறித்து பாடியுள்ளனர். நந்திவர்ம பல்லவனுக்குக் குலதெய்வமாகவும், பல்லவர்கள் காலத்தின் வழிபாட்டில் உச்சத்தில் இருந்தது தவ்வை தெய்வம். இங்கு காணப்படும் தவ்வையின் வலப்புறத்தில் மகன் மாந்தனும் இடப்புறத்தில் மகள் மாந்தியும் காணப்படுகிறார்கள். முழு உருவச் சிலையில் தலைப்பகுதி மட்டுமே தற்போது உள்ளது. எஞ்சியவை உடைந்து போய் இருக்கிறன. அவை மண்ணில் புதையுண்டு இருக்கலாம்.

முட்புதரின் வடக்கிழக்குப் பகுதியில் இரண்டு சிலைகள் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக உள்ளது நான்முகன் எனப்படும் பிரம்மாவாகும். மூன்று முகங்களுடன் 4 கரங்களுடன் அழகிய வேலைப்பாட்டுடன் உள்ள இச்சிலையில் கால்முட்டி வரை புதைந்த நிலையில் உள்ளது. வலப்புற மேற்கரத்தில் படைப்புத் தொழிலுக்குத் தேவையான அக்க மாலையுடனும், மற்றொரு கரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையிலும் இடப்புற மேற்கரத்தில் பிரம்மாவின் அடையாளமான கமண்டலத்துடனும் மற்றொரு கரம் இடுப்பில் கைவைத்த நிலையிலும் காட்சியளிக்கிறது. மார்புப் பட்டை உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களில் உள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த நேர்த்தியாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

இதன் அருகில் காணப்படும் விஷ்ணு துர்கை சிலையில் தலைப்பகுதியும் இருகரங்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது. எஞ்சிய இரு கரங்களும் உடல்பகுதி முழுவதும் மண்ணில் புதைந்துள்ளது. வெளியில் தெரியும் இரு கரங்களில் வலக்கரத்தில் சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் காணப்படுகின்றன. இதன் அருகிலேயே சிலதூண்களும் பெரிய குளமும் உள்ளது. எனவே, இங்கு ஒரு பெரிய கோயில் இருந்ததற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தப் பகுதியை கவனமுடன் அகழாய்வு செய்தால் மேலும் பல சிலைகளும் முக்கிய வரலாற்றுப் பொக்கிஷங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தச் சிலைகள் யாவும் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. வரலாற்று சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்கள் அழியும் நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது.

தொல்லியல் துறையும், வருவாய் துறையும் அவற்றை மீட்டுப் பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>