பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஆணையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வியன்னா (Vienna) மாநாட்டு உடன்படிக்கையின் பிரகாரம், கடமைகளுக்கான பிரித்தானியாவிற்கு வருகைத் தந்த ராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் தற்போது தொடர்ந்து வசிக்கவில்லை என்பதனையும் உயர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர் ஆணையத்தில் இடம்பெற்றது. அப்போது ஆணையத்திற்கு வௌியே புலம்பெயர் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் அலுவலக மேல் மாடியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மேற்கொண்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டிற்கு வரவழைக்கப்பட்டதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ மட்டத்தில் விளக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து, மீண்டும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஆணைத்தில் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இந்த நிலைமையின் கீழ், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டிற்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த பின்னணியில், சம்பவம் தொடர்பில் லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தன.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு லண்டனில் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் தாம் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.