கொரோனா தாக்கி புகழ் பெற்ற ஈழத் தமிழர் நாடக – திரைப்படக் கலைத்தந்தை பிரான்சில் பலி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர் ஏ.ரகுநாதன் 22.04.2020 மதியம் 14:00 மணியளவில் கொரோனா தொற்றிற்கு பலியானார்.

இலங்கையின் திரைத்துறையில் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ் பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் புகழ் பெற்றிருந்தார்..

இலங்கையில் 1960களின் இறுதிக்காலப் பகுதியில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலப் பகுதியில் ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டிருந்தார். அதனால் அவர் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற நாடகக் கலைஞர் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிகாட்டலில் தன்னுடைய கலையுலகப் பயணத்தை தொடங்கிய அவர் திரைப்படத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இலங்கைத் தமிழ் திரைப்படங்களான நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று நடித்துள்ளார்.

கலைஞர் இரகுநாதன், வானொலி நாடகம், மேடை நாடகம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றவராக விளங்கியதுடன் திரைப்படத் துறையிலும் பல்வேறு ஆற்றல்களைக் கொண்டு விளங்கியிருக்கின்றார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியிருந்த நேர்காணலின் ஒரு பகுதியாக தன்னைப் பற்றித் தெரிவிக்கையில்,

சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்று எழுதியிருக்கின்றேன் ஆனால் நாடகத்தில் தான் என் முழு நாட்டமும் இருந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்த எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் அத்தனை பேரின் நெறியாள்கையில் நான் நடித்திருக்கின்றேன். இப்பொழுது கூட இங்கே சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றேன்.

பள்ளிக்கூட நாடகங்கள் பலவற்றுக்குப் பயிற்சி கொடுக்க சொர்ணலிங்கம் ஐயா என்னைத் தான் அனுப்புவார் என்பது எனக்குப் பெருமை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை இலங்கையில் வாழ்கின்ற நாடகத்துறை சார்ந்த மிக மூத்த கலைஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இராஜாக்களின் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஆற்றலும் அழகும் கம்பீரமும் கொண்ட அவர் மிகச் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தவல்லவர்.

அதேபோல இராவேணசன் போன்ற இலங்கையின் புகழ்பெற்ற நாடக கதா பாத்திரங்கள் உருவாக்கம் பெற்ற காலங்களில் அவற்றினை மெருகேற்றுவதிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்றும் அவருடைய இழப்பு இலங்கையின் பாரம்பரிய நாடகத் துறைக்கு பாரிய இழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர்இ அங்கும் நாடகம்-திரைப்படம் என்பனவற்றில் ஈடுபட்டு வந்தார்.

2016ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐபிசி தமிழா நிகழ்ச்சியில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மாண்பேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#covid19 #coronatamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>