‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரித்துள்ளார்ர்.

இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனையொன்று நாட்டில் உள்ளதாகவும், அந்த பிரச்சனையை அனைத்து தரப்பினரும் மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி, உயிரிழந்தவர்களே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாகவே காணாமல் போனோரின் உறவினர்கள் கூறி வருவதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டார்.

ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 4000 திற்கும் அதிகமானோர் யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதையும் அவர் இதன்போது கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்து, சடலங்கள் கிடைக்காதவர்களே இந்த காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த களம் தொடர்பிலான புரிந்துணர்வு இல்லாதவர்களே, இவ்வாறான பிரச்சனைகளை எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

காணாமல் போயுள்ளதாக கூறிக் கொள்ளும் சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் முழுமையான ஆய்வொன்று நடத்தப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்தை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என கூறிய ஜனாதிபதி, காணாமல் போனமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஜெனீவா விவகாரம்

நாடொன்றிற்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமொன்றை இதுவரை எந்தவொரு நாடும் ஆதரிக்காத நிலையில், இலங்கையை ஆட்சி செய்த கடந்த அரசாங்கமே அதனை ஆதரித்திருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவிக்கின்றார்.

நாட்டு மக்கள் தனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அந்த தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்திருந்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் ஊடாகவே அவர்களின் பிரச்சனைகளுக்காக தீர்வை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர்கள் முதலில் பொருளாதாரத்தை இலக்காகவே கொண்டே போராட்டங்களை ஆரம்பித்திருந்ததாக கூறிய ஜனாதிபதி, பின்னர் அந்த போராட்டங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டில் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பு இருக்கின்றமை தொடர்பில் தான் நம்பவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவிக்கின்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>