கோத்தபய ராஜபக்‌சே வெற்றியால் கலங்கும் எதிர்க் கட்சிகள்!

கோத்தபய ராஜபக்‌சே வெற்றியால் கலங்கும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணிக் கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌சே 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதாவது எதிர்க்கட்சிகளை விட 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இந்தநிலையில், தற்போது ஆளும் கட்சியாக உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பிறகு அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்கள் பலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசியல்!

இலங்கை, பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து 1948-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாட்டின் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகப் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டது. பின்னர் 1972-ம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறியது, அப்போதும் பிரதமரே அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக இருந்தார். இந்த நடைமுறை 1978-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இலங்கையில் அதிக அதிகாரம் கொண்டவராக `ஜனாதிபதி’ நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி பதவி உருவாக்கத்துக்குப் பிறகு அவரே நாட்டின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால் பிரதமரின் அதிகாரங்களில் பாதி பறிக்கப்பட்டது. இலங்கை அமைச்சரவையில் 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனியாக நாடாளுமன்றத் தேர்தலும் அதிபரை தேர்ந்தெடுப்பதற்குத் தனியாகவும் தேர்தல் நடக்கும். பொதுமக்களின் வாக்குகளை நேரடியாகப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஆறு ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்யலாம்.

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதிபருக்கே உண்டு. இலங்கையில் நடக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அதிபரே தனியாக முடிவெடுத்துக்கொள்ளலாம். இதற்குப் பிரதமரின் ஆலோசனை தேவையில்லை. அவரின் ஆலோசனை தேவை என்கின்றபட்சத்தில் மட்டுமே கேட்கப்படும். அதிபரும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதுவே, இருவரும் வேறுவேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்படும்.

2018-ல் இலங்கை அரசியல்!

2015-ம் ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான பொதுத்தேர்தலில், ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் மைத்ரி பால சிறிசேன. இவர் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சேவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றதால், ரணிலையே பிரதமராக நியமித்தார் அப்போதைய அதிபர் சிறிசேன.

இவர்கள் தலைமையில் இரண்டு ஆண்டுகள் இலங்கை அரசியல் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்துவந்தது. பின்னர் 2018-ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் மகிந்த ராஜபக்‌சேவை நியமித்தார் அதிபர் சிறிசேன. `இது அரசியலமைப்புக்கு எதிரானது’ எனக் கூறி ரணில் முறையிட்டார். இதனால் 2018-ம் ஆண்டு இலங்கை பல்வேறு அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து. அதே ஆண்டு இறுதியில் ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தற்போதைய இலங்கை அரசியல்!

இலங்கை நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை தற்போது ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்த கோத்தபய ராஜபக்‌சே வெற்றி பெற்றுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிகழும் என்றும் 2018-ம் ஆண்டு நடந்தவை மீண்டும் நிகழக்கூடும் எனவும் அரசியல் வட்டாரத்தில் அச்சம் வெளிப்பட்டது. இதற்கு இடம் அளிக்கக் கூடாது என்பதற்காக, நேற்று வெளியான அதிபர் தேர்தல் முடிவுக்குப் பிறகு தன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரணில் விக்ரமசிங்கே.

இதன் முடிவில் அனைவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இலங்கையின் நிதித்துறை அமைச்சர் மங்கல சமரவீரா தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டுத் துறை, தகவல் தொலைத்தொடர்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உச்சக்கட்டமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்‌சே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சேவின் சகோதரர். இவர் இன்று இலங்கையில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த ரூவன்வேலி சேயா (Ruwanweli Seya) புத்தர் கோயிலில் அதிபராகப் பதவியேற்றார். அப்போது , `இலங்கையின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>