இலங்கையில் 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சுதந்திரக் கட்சியின் மைத்திரிய சிறிசேனா அதிபராகவும், ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரம சிங்கே பிரதமராவும் உள்ளனர். அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தலைமையிலான எஸ்.எல்.பி.பி கட்சி அமோக வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எஸ்.எல்.பி.பி கட்சி கொண்டு வந்தது. இந்த நம்பிகையில்லா தீர்மானத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்ரம சிங்கே வெற்றி பெற்றார்.
அங்கு நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது சுதந்திர கட்சியைச் சார்ந்த 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் ஆகியோர் ரணில் விக்ரமசிங்குக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த அறிவியல்-தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜான் செனவிரத்ன, இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உட்பட 16 அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அந்தக் கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அளித்தனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாகப் பதவி விலகிய அனுரா பிரியதாசனா கூறுகையில், பிரதமருக்கு எதிராக வாக்களித்த பிறகு நாங்கள் அந்தப் பதவியில் இருப்பது சரியல்ல. எனவே நாங்கள் இனி சுதந்திர கட்சியின் உறுப்பினர்களாக மட்டுமே செயல்பட உள்ளோம். ராஜபக்ஷே கட்சிக்கு மாறமாட்டோம் எனத் தெரிவித்தார். இவர்களின் பதவி விலகளின் காரணமாக ஓரிரு நாளில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.