முதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
வடக்கு மாகாண முதலமைச்சராக அடுத்த தடவை சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்ப்பு வெளியிட்டமையை மறுத்து, உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினாலும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவர் அப்படித் தெரிவித்தார் என்பதை உதயன் பத்திரிகையிடம் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக உதயன் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அனுப்பி வைத்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு மாகாணசபை விவகாரம் ஒரு வழியாக முடிவிற்கு வந்ததன் பின்னர், 22.06.2017 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாணசபை குழப்பம் தொடர்பாகவும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். மாவை.சேனாதிராசாவும் தனது விளக்கத்தைத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நான் எனது விளக்கத்தைப் பின்வருமாறு முன்வைத்தேன்.
மாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் மாகாண சபையை வழி நடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று நானும் எமது கட்சியின் தலைவரும் வலியுறுத்தினோம். பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு ஒரு முறைகூட கூடவில்லை.
மாகாண சபையின் முதல் ஒன்றரை வருடங்கள் உங்களது வழிகாட்டலின்படியே முதலமைச்சர் செயற்பட்டார். அப்பொழுது உங்களுக்கு முதல்வர் நல்லவராகத் தெரிந்தார். உங்களது பிழையான இராஜதந்திர அணுகுமுறையும் கள யதார்த்தமும் முதல்வரை மக்கள் நலன்சார்ந்து செயற்படத் தூண்டியிருந்தது. இதனால் உங்களுக்கும் முதல்வருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகியது.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சியால் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பிரச்சினை கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்திருந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் என்ற நிலையில் நீங்கள் இதனைச் சரியாக அணுகவில்லை. இந்தக் குற்றச்சாட்டை உரிய முறையில் அணுகி, அமைச்சர்களை மாற்றியிருந்தால் மாகாண சபையின் பிரச்சினை இவ்வளவுதூரம் வந்திருக்காது.
புளொட் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நான்கு அமைச்சர்களையும் மாற்றி சுழற்சி அடிப்படையில் ஏனைய நால்வருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் உட்பட பதினாறு மாகாணசபை உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர். அன்று அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திருக்காது.
கடந்த ஓராண்டு காலமாகவே அமைச்சர்கள் தொடர்பாக ஊழல் மோசடிகளும் குற்றச்சாட்டுகளும் ஊடகங்களின் வாயிலாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டபோது நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னரும் நீங்கள் தலையிட்டு அந்த அறிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனையும் நீங்கள் செய்யவில்லை. இதனால் முதலமைச்சர் சபையின் மாண்பையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் தக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அமைச்சர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் அதற்கு ஆதரவானவர்களாகவும் இருந்ததால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கைவிடுவதற்கும் இதற்காக முதலமைச்சரை நீக்குவதற்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தீர்கள். மக்கள் செல்வாக்கும், ஈ.பி.ஆர்.எல்எவ், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் ஆதரவும் முதலமைச்சருக்கு இருந்ததாலும் முதலமைச்சரின் பக்கம் நியாயம் இருந்ததாலும் வேறுவழியின்றி உங்கள் நடவடிக்கையிலிருந்து நீங்கள் பின்வாங்கினீர்கள்.
பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியதும் இரண்டாம் நாள் நான் உங்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் நீங்கள் அன்று நேரம் இல்லையென்றும் அடுத்த இரண்டு தினங்கள் கழித்து கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்குமாறு என்னிடம் தெரிவித்திருந்தீர்கள். இது தொடர்பாக நான் மாவை அண்ணனைத் தொடர்பு கொண்டபோது அவர், ‘‘நான் இப்பொழுது ஆளுநர் அலுவலகத்தில் இருக்கிறேன். நீங்கள் சம்பந்தருடன் கதைத்துவிட்டீர்கள்தானே! அதுவே போதுமானது’ என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்.
பின்னர் அழைக்கவில்லை. ஏனையவர்களுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக புளொட் கட்சியைச் சேர்ந்த முக்கியமான ஒருவரிடம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன். இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோதும் உங்களால் உரியவகையில் செயலாற்ற முடியாமல் போயிருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சருக்கு ஆதரவாக பங்காளிக் கட்சிகளும், நியாயத்தின் பக்கம் நின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அணி திரண்டிருந்தனர். நாங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிப் போயிருக்கும்.
நாம் கூடிப் பேசியிருந்தால் பிரச்சினையை சுமுகமாக முடித்திருக்க முடியும். இறுதியில் பங்காளிக் கட்சிகள் மதத்தலைவர்கள் ஆகியோரின் முயற்சியாலேயே வடக்கு மாகாணசபையின் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவரமுடிந்திருந்தது. கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற குறுகிய சிந்தனையே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் என்று எனது விளக்கத்தை முன்வைத்தேன்.
இதன்போது என்னையும் சேர்த்து பன்னிரண்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரும் இடைநடுவில் பேசவில்லை. எனது உரையைத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது நான் வைத்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார். அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் விக்னேஸ்வரனை வேட்பாளராகத் தெரிவு செய்யாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்துவீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று தெரிவித்தாரர். ஆம் இந்தமுறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்த முறையும் நாம் ஆதரிப்போம் என்று பதிலளித்தேன்.
தமிழரசுக் கட்சியின் மீதும் கூட்டமைப்பின் தலைவர் மீதும் எம்.ஏ.சுமந்திரன் மீதும் நான் வைத்த விமர்சனங்களை எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக் கொண்டதுபோலவே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களும் ஏற்பதாகக் கூறினார்.
உண்மை இவ்வாறிருக்கையில், உதயன் பத்திரிகை ‘அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈபிஆர்எல்எப் எதிர்ப்பு’ என்று 23.06.2017 அன்றைய நாளிதழில் முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் நான் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. செய்தி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தொடர்பானது. என்னைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டறிந்து கொண்டிருக்கமுடியும். இதில் மற்றொரு சிறப்பம்சம் அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான ஈ.சரவணபவன் நான் உரையாற்றியபோது கூட்டத்தில் சமூகமளித்திருந்தார். அவரிடம் கேட்டாவது செய்தியை உறுதிப்படுத்தியிருக்க முடியும். மேலும் செய்தியைக் கொடுத்தவர் யார் என்பது குறித்து எத்தகைய தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
அறிந்தோ அறியாமலோ உதயன் பத்திரிகை ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை காலமும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்ட விவரங்களை ஈபிஆர்எல்எப்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எம் மீது சுமத்தப்பட்டிருந்தது. இன்று உதயன் அவசர அவசரமாக ஒரு பிழையான செய்தியை வெளியிட்டதன் மூலம் அந்தக் கருமத்தைத் தானே செய்துவந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது. பொதுவாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விடயங்களை பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பதில்லை என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
எப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதோ அன்றிலிருந்து யாராவது ஒருவர் செய்திகளை முந்திக்கொண்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பது தொடர்கிறது. இந்த விடயத்திலும் நாம் உட்கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்ப்பதற்கு முயற்சித்தோம்.
உதயன் தவறான செய்தியை வெளியிட்டதன் விளைவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை ஊடகத்திற்கும் அதன் வாயிலாக மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது – – என்றுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
(அ) வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறுவது முற்றிலும் பொய் என்பதை உதயன் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியது.
(ஆ) செய்தி வெளியிடப்படுவதற்கு முன்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டறிந்து கொண்டிருக்க முடியும் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கிறார். ஆம், அப்படி கேட்டறிந்துகொண்ட செய்தியைத்தான் உதயன் வெளியிட்டது. ஒன்றல்ல மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்தான் செய்தி வெளியிடப்பட்டது. அவர்களில் ஒருவர் தான் கூட்டத்தில் நடந்தவை பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என்றார். உதயன் அறிந்திருந்த விடயங்களை அவரிடம் கூறி இவ்வாறு கூட்டத்தில் பேசப்பட்டது உண்மையா என்பதை மட்டுமாவது உறுதிப்படுத்துங்கள் என்று கேட்டபோது, ‘‘ஆம்! அப்படித்த◌ான் பேசப்பட்டது’’ என்று அவரும் உறுதிப்படுத்தினார்.
(இ) வெளியிடப்பட்ட செய்தியை மறுத்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம் அனுப்பி வைத்த பின்னர் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கனளயும் தொடர்பு கொண்டு உதயன் வினவியது. அவர்கள் அனைவருமே சிவசக்தி ஆனந்தன் அப்படித்தான் கூறினார் என்று உறுதிப்படுத்தினர். தனது விளக்க அறிக்கையில் அவர் கூறியிருப்பதைப் போல, ‘‘ஆம்! இந்த முறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்த முறையும் நாம் ஆதரிப்போம்’’ என்று அவர் கூறியிருப்பது முற்றிலும் பொய் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அதற்கு எதிரான கருத்தையே அவர் கூடட்டத்தில் தெரிவித்தார் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
(ஈ) தற்போது தனது விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதன் சாராம்சத்தை சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தில் கூறினார் எனினும், அறிக்கையில் அவர் மேலதிகமான ஆலாபனைகள், இடைச் செருகல்கள், மெருகூட்டல்களைச் செய்திருக்கிறார் என்றும் அங்கே அவர் பயன்படுத்தியே இருக்காத சொற்கள் சிலவற்றை அரசியல் இல◌ாபம் கருதி இந்த விளக்கத்தில் தான் கூறினார் எனத் தெரிவித்திருக்கிறார் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(உ) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான விடயத்தில் அவர் இந்த அறிக்கையில் ◌சொல்லப்பட்டிருப்பது பேரன்றல்லாது அதற்கு நேர் எதிர்மாறாக, முதலமைச்சரை மீண்டும் தேர்தலில் நிறுத்தினால் தாம் ஆதரிக்கப்போவதில்லை என்றுதான் கூறினார் என்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் உதயன் பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினர்.
(ஊ) உதயன் பத்திரிகைக்குத் தகவல் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பெயர் விவரங்களை வெளியிட விரும்பாததன் காரணத்தாலேயே அவை வெளியாகவில்லை. செய்தி மூலங்களைப் பாதுகாப்பது ஒரு பத்திரிகையின் கடமை. அதனைச் செய்வதால் பத்திரிகையின் நம்பகத்தன்மை ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
(எ) நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 071 4347480 என்ற அலைபேசி எண்ணுக்கு, 22.06.2017 அன்று இரவு 10.10 தொடக்கம் 10.30 மணி வரையிலான நேர இடைவெளியில் உதயன் அலுவலகத் தொலைபேசி இலக்கமான 021 493 0000 இலிருந்து இரு தடவைகள் அழைப்பு எடுக்கப்பட்டது. பதிலளிக்கப்படவில்லை. மேலதிக தகவலைப் பெற்றுக் கொள்வதற்காகவே அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை. அதனையே செய்தியில் குறிப்பிட்டும் இருந்தோம்.
(ஏ) இறுதியாக, உதயன் எந்தத் தவறான செய்தியையும் வெளியிடவில்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.