சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி இலங்கையிலுள்ள யாழ்பாணம் மாவட்டம் எழுவைத் தீவைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதில் 6 சிறிய ரக பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெய்வதனன், நிசந்தகுமார், நந்தகுமாரன், அர்த்தநாத், நிதர்சன், வின்சன், ஆண்ட்ராணி ஜவதாஸ், ஆண்ட்ராணி அரியதா, மரியலனஸ், மரிடிமஸ், மரியசெல்வம், மணிலாஸ், வின்சாண்டி, ஆரணிதாஸ் , அல்போன்ஸ் ஆண்ட்ராணி, ஆண்டன்ரோபேட், டாணியன், சூட்சைசிந்து ஆகிய 18 பேரையும் இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 இலங்கை மீனவர்கள் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையிலுள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவைத் தீவைச் சேர்ந்த 18 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய தூதரகத்தில் துணை தூதர் பாலச்சந்திரனிடம் புழல் சிறையிலிருக்கும் மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
முன்னதாக அக்டோபர் மாதம் 3, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.