இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன.
எனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பின்னணியில், தமிழ் பேசும் சமூகம் சார்பில் இந்த முறையும் ஒரு சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்தர்களை தவிர்த்த ஏனைய தரப்பினருக்கு இலங்கை அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியாக முடியாது என சமூகத்தில் கருத்தொன்று நிலவுகிறது.
தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வரலாறு :
பௌத்தர்கள் தவிர ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்ற கருத்து சமூகத்தில் அதிக அளவில் பேசப்படுகிற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போட்டியிட்ட வரலாறும் இருக்கிறது.
இலங்கையில் 1982 ஆம் ஆண்டு, நாட்டின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நாள் முதல் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதற்கான தகவல்கள் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஆவணங்களில் உள்ளன.
1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் சின்னத்தில் தமிழரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் போட்டியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1988 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கவில்லை.
எனினும், 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல், தராசு சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு தமிழ் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் வேட்பாளரோ போட்டியிடவில்லை.
எனினும், 2010ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு தமிழ் வேட்பாளரும் போட்டியிட்டனர்.
இதன்படி, மொஹமத் காசிம் மொஹமத் இஸ்மயில், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மொஹமத் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டு மொஹமட் இலியாஸ், இப்றயிம் மிப்லார் மற்றும் சுந்தரம் மகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இலங்கையில் 7 தடவைகள் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தலில் 8 தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ள போதிலும், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெற்றிருக்கவில்லை.
பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்றால், தேர்தல்கள் திணைக்களம் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏன் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வாவை தொடர்புக் கொண்டு வினவியது பிபிசி தமிழ்.
தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என இலங்கை அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை என அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா சுட்டிக்காட்டினார்.
தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் எனக் கூறிய அவர், போட்டியிடுவோருக்கு மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஜனாதிபதியாக சிறுபான்மையினர் வர முடியும் எனவும் கூறினார்.
பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என சமூகத்தில் கூறப்பட்டுவரும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டார்.
- பிபிசி தமிழ்