பிரசவத்துக்காக இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர், நிரோஜன். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும், ஸ்டெல்லா என்ற 5 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ஜாஸ்மின் பிரசவத்துக்காக தலைமன்னாரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கே அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவர் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல முயன்ற ஜாஸ்மின்னிடம், யாழ்ப்பாணத்தில் அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேறு வழி தெரியாத நிரோஜன், இந்தியாவுக்கு வந்து பிரசவம் பார்க்க முடிவு செய்து, நேற்றிரவு தலைமன்னாரிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தனுஷ்கோடி காவல் துறையினர், நிரோஜன், அவரது மனைவி ஜாஸ்மின், குழந்தை ஸ்டெல்லா மற்றும் உறவினர் கிருத்திகன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரோஜன் தம்பதியினர் ஏற்கெனவே தமிழகத்தில் அகதியாகத் தங்கியிருந்த போது முதல் குழந்தையான ஸ்டெல்லா பிறந்தது குறிப்பிடத்தக்கது.