வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக திருமதி. அனந்தி சசிதரனும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
முன்னதாக, வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைகேட்டு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார். மேற்படி விசாரணை குழு, கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சர்களான திரு. குருகுலராஜா மற்றும் திரு. பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கும்படி பரிந்துரைத்தன் விளைவாக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வி அமைச்சராக திரு. க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி. அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்ணேஸ்வரன் விவசாய, கால்நடை அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றவுள்ளார்.
வடமாகாண புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் எனக்கு கிடைத்திருக்கின்றது. அமைச்சுப்பதவி கிடைத்த உடனேயே பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. ஏதோ கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி வடக்கு மாகாண சபையில் இருக்காது என நினைக்கின்றேன்.
எப்படியிருப்பினும் மக்களுடைய பிரச்சினைக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை புதிதாக பதிவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.