இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் காணாமல் போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை வரும் 30 ஆம் தேதி வெளியிட போவதாக காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கூறப்படும் நபர்களின் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் செயலகத்திற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கை அன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள “உலக காணாமல் போனோர் தினம்” தொடர்பான நிகழ்வு பற்றிய செய்தி ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில், அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சாலிய பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள நபர்களின் குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய நலன்புரி நடவடிக்கைகள், அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, நீதியை நிலைநாட்டும் விதம் போன்ற பரிந்துரைகள் இடைக்கால அறிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன. மன்னார் மற்றும் மாத்தளை பிரதேசங்களில் மனித புதைக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இவை காணாமல் போன நபர்களின் எலும்புக் கூடுகளா என்பது தெரியாது. இது சம்பந்தமாக ஒரு சட்ட ரீதியான வரையறைக்குள் இருந்து, அவை தொடர்பான விசாரணைக்கான நிதி அல்லது தொழிற்நுட்ப ரீதியான உதவிகளை காணாமல் போனோர் தொடர்பான செயலகம் வழங்க முடியும். நான்கு தசாப்தங்களாக நடந்த சம்பவங்களுக்கு உடனடியாக எம்மால் தீர்வை வழங்க முடியாது. எனினும் ஆறு மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் நாங்கள் நடத்திய விசாரணைகளுக்கு அமைய இந்த இடைக்கால அறிக்கையை வெளியிட முடிந்துள்ளது எனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.