காணாமல் போனோர் பெயர் பட்டியலிலுள்ள பலர் வெளி நாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என்று கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், முதலில் சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தங்கள் பெயர், விபரங்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே இலங்கையில் உண்மையாக காணாமல் போனோர் பட்டியலை தயாரிக்க முடியும்.
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற கணிப்பு தவறானது. எமது இராணுவம் பொது மக்களை இலக்கு வைத்து ஒரு போதும் யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. பொது மக்களை பாதுகாத்து புலிகளை மட்டுமே இலக்கு வைத்து யுத்தத்தை முன்னெடுத்தனர். அதனால் தான் இராணுவத்தினர் அதிக அளவில் கொல்லப்படவும் காரணமாக அமைந்தது.
காணாமல் போனோர் பட்டியலில் அதிகமான பெயர்கள் உள்ளன. எனினும் யுத்த காலத்தில் சரணடைந்ததாக கூறப்படும் நபர்கள் காணாமல் போனதாக ஒட்டு மொத்தமாக கருதுவதும் தவறானது. ஏனெனில் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எத்தனை பேர் என்பதற்கான முழுமையாக அறிக்கை வெளி விவகார அமைச்சிடம் இல்லை.
இலங்கையில் இருந்து சென்றவர்கள் பலர் தமது பெயர்களை மாற்றிக் கொண்டு அந்தந்த நாடுகளில் பதிவாகியுள்ளனர். எனினும் உண்மையான பெயர்கள் இங்கு காணாமல் போனோர் பட்டியலில் உள்ளது. முதலில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே இலங்கையில் காணாமல் போனோரின் உண்மையான பட்டியலை தயாரிக்க முடியும் என்றார்.