திட்டமிட்டு சிங்களமயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

திருகோண மலையில் தமிழ் மன்னன் இராவணேஸ்வரனால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த கன்னியா வெந்நீரூற்று முற்று முழுதாக தற்போது சிங்களமயமாக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அதனைச் சுற்றிலும் புத்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டு சிங்கள வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தமிழ் மொழியிலும் செய்தியைக் கொண்டிருந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கே நுழைவுச் சீட்டில் அந்த இடம், ஒரு பெளத்தமத இடம் எனபதாகவும் அச்சிட்டு தரப்பட்டுள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழர் வரலாற்றுடனும் அவர்களின் கலாசாரத்துடனும் இணைந்த சுற்றுலா மையமாக விளங்கும் ஓர் இடமே கன்னியா வெந்நீரூற்று.

இது திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா கிராம அலுவலர் பிரிவில் உள்ளது. புராதன மன்னராட்சிக் காலத்துக்குரிய இந்த புனித இடம் தமிழ் மக்களின் சமூக, சமய நம்பிக்கைகளுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சிவபெருமானின் தெற்கு உறைவிடமான திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலுக்கு சிவபக்தனாகிய பத்துத் தலை இராவணன் சென்றான். அங்குள்ள லிங்கத்தில் மனதைப் பறிகொடுத்த அவன் அந்த லிங்கத்தை அங்கிருந்த பாறையிலிருந்து வெட்டி எடுத்து தனது தாயாரின் வணக்கத்துக்காக கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினான். அப்படி அவன் பாறையை வெட்டிய பகுதியே கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் காணப்படும் இராவணன் வெட்டு.

இராவணணின் இச்செயலால் கோபமுற்ற சிவன் பாறையைத் தமது காலால் நகர்த்தி அழுத்தினார். அவன் அதில் சிக்கிக் கொண்டான். இந்தியாவில் இருந்த இராவணணின் தாயார் இதனைக் கேள்விப்பட்டு இராவணன் இறந்துவிட்டான் என நினைத்தாள். அந்த அதிர்ச்சியில் அவள் உயிரிழந்தாள். ஆனால், அவனால் சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. அவன் சிவனைப் பிரார்த்தித்து தன்னை மன்னிக்க வேண்டினான். சிவன் மன்னித்தார். அதன் பின் இராவணன் தனது தாயாருக்கு 31 ஆவது நாள் கிரியையைச் செய்ய முனைந்தான். அவன் கன்னியா என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்று தனது உடைவாளை உருவி ஏழு இடத்தில் குத்தினான். அந்த இடத்தில் வெந்நீரூற்றுக்கள் வெளிக் கிளம்பின என புராதன கதைகள் கூறுகின்றன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையுடைய சூட்டினைக் கொண்டவை.

90 – 120 சென்ரி மீற்றர் ஆழமுடைய சிறிய சதுர கிணறுகளே ஆரம்பத்தில் இருந்தன. காலப்போக்கில் அவை புனரமைக்கப்பட்டன. இங்கு ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. பல தலைமுறையாக இந்து, தமிழ் மக்கள் தங்களின் நெருங்கிய உறவுகளின் 31 ஆவது நாள் சமய கடமைகளை இங்கேயே செய்து வந்தனர்.

இவ்வாறு தமிழர் வாழ்வியலுடன் இணைந்த இந்த வெந்நீரூற்று தொடர்பாக நவாலியூர் சோமசுந்தரப் புலவர், ‘காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று நிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னியாயில்’ எனப் பாடியுள்ளார்.

ஆனால் இன்றைய நிலை…?

இத்தகைய சிறப்பு மிக்க கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த மயமாகி வருகிறது. அங்குள்ள பிள்ளையார் ஆலயம் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பெயர் பலகைகளில் ஒரு சில தமிழ் சொற்களே உள்ளன. அதிலும் கூட தமிழை கொலை செய்து எழுதப்பட்டுள்ளது.

வெந்நீரூற்றைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடம் 10 ரூபா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனிச் சிங்களத்தில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் அந்த சீட்டில் ஒரு தமிழ் எழுத்துக்கள் கூட இல்லை. பௌத்த விகாரை விரிவாக்கமும் இராணுவத்தினர் கூட்டம் மட்டுமே அங்குள்ளது என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

இது தவிர, வெந்நீரூற்றுக்கு செல்லும் வகையில் புதிய பாதை அமைக்கும் பணியும் நடக்கிறது. சரித்திர ரீதியாகவும், தலைமுறை தலைமுறையாகவும், பல நூற்றாண்டுகளாகவும் தமிழ் – இந்துக்களுக்கு இருந்து வரும் மத, கலாசார ரீதியிலான உரிமைகளை மூர்க்கத்தனமாகவும் கொடூரமாகவும் மறுக்கும் வகையில் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த – சிங்கள அத்துமீறலையும் அட்டகாசங்களையும் நேரடியாக பார்க்க கூடியதாக உள்ளது.

இவ்வாறு தமிழர் வாழ்வில் இருந்த கன்னியா வெந்நீரூற்று கொஞ்சம், கொஞ்சமாக விடுபட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்திக் காப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்பு வாய்ந்த சமூக, சமய அமைப்புக்களும் முன்வர வேண்டும். சிங்கள தேசம் திட்டமிட்டு தமிழர்களை, தமிழர்கள் வரலாற்றை, பாரம்பரியத்தை, நிலத்தை, சொத்துக்களை, தமிழர்களுக்கென்று இருக்கும் அனைத்தையும் உலக நாடுகளுடனும் சேர்ந்து இனவழிப்பு செய்து வருகிறது என்பதை தெளிவாக தெரிகிறது.

இதற்கெல்லாம் மக்களாகிய நாம் தான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>