யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் இன்று (03-05-2019) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் உருவப்படங்கள் வைத்திருந்த மாணவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள், தங்கும் விடுதிகளில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இலங்கை முழுவதும் ராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர்களின் விடுதி ஆகியவற்றில் இன்று அதிகாலை முதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது பல்கலைக்கழக கலைப்பீடத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலில் பலியான மாவீரர்களின் புகைப்படங்கள், பதாகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து பைனாகுலர், ராணுவத்தினர் அணியும் காலணி ஆகியவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் மறைந்த விடுதலைப் புலிகளின் படங்களை வைத்திருந்ததன் காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் நகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.