இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புகள் சில புதன்கிழமை (12-02-2020), கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் இன்று (13-02-2020) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்

துறையினர் குறிப்பிடுகின்றனர். அகழ்வு பணிகள் முடிந்த பின்பே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை மற்றும் விவரம் தெரியவரும்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவ்மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டிடம் கட்டும் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் கண்ணிவெடிகளும், காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த பகுதியை பார்வையிட்டார். இப்பகுதியை மேலும் அகழ்ந்து, விடயங்களை சேகரிக்குமாறு அவர் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், குறித்த பகுதி தொடர்பிலான வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே மனித எச்சங்கள் எந்த காலப் பகுதிக்கு சொந்தமானவை என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>