இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘‘இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்.
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புபவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் உள்ள சட்ட சிக்கல்களைக் களைய வேண்டும்.
போர்க் காலங்களில், இலங்கையிலிருந்து சுமார் 10 லட்சம் தமிழர்கள் வெளியேறிவிட்டனர். அவர்களுக்குச் சொந்தமான 65,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அங்கு, இன்னும் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. அந்த நிலங்களைத் தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்திவருகிறோம்.
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால், அவர் தன் அரசியல் வாழ்க்கையைச் சிங்களர், பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரின் போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்குப் பின்னர் உறுதியாகத் தெரிந்துவிடும்.
சிங்களர், பௌத்தர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் அவர் மேற்கொண்டால், சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். எங்களுக்கு மாகாண அரசு திரும்பக் கிடைத்தால், தாயகம் திரும்பும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்போம். ஐ.நா-வின் போர்க் குற்ற நடவடிக்கைக்கு இந்த அரசு ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள், கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்களா என்று தெரியவில்லை. இப்படியிருக்க, 7 பேரையும் இத்தனை ஆண்டுக்காலம் சிறையில் வைத்திருப்பது எதற்காக..? விடுதலை செய்வதில் அரசியல் காரணம் இருக்கிறதா என்றும் எண்ணத்தோன்றுகிறது’’ எனத் தெரிவித்தார்.
- விகடன்