பிரிட்டிஷ்காரர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கி, சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கம்பத்தை நவீனமாக்கிய இருநூறாம் ஆண்டை நிறைவு செய்யும் வகையில் அடுத்த ஆண்டு (2019) அமையும். இந்த இருநூறாண்டுகள் என்பது இந்த நாட்டின் இமாலய வளர்ச்சியின் மைல்கல். வரலாற்று ஏடுகளைப் புரட்டும் பட்சத்தில், ஒவ்வொரு கால கட்டத்திலும் சிங்கப்பூர் சவால்களைச் சந்தித்த வண்ணமாகவே இருந்து வந்துள்ளது. சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் தொடங்கி இன்றைய அரசியல் தலைவர்கள் வரை, நாட்டு நிர்மாணத்தில் எழும் சவால்களை எதிர்கால வளர்ச்சிக்கான ஆக்கபூர்வ வாய்ப்புகளாகக் கருதி, தொலை நோக்குப் பார்வையின் அடிப்படையில் தீர்வும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. உணர்வுசார் திட்டங்களாக இல்லாமல், அறிவுசார் திட்டங்களாக இருக்கும்போது, நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடிகின்றது.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, கடந்த இருநூறாண்டுகளில் நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு தேறி வந்துள்ளது என்பதை ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, மதிப்பீடு செய்ய வேண்டும். முக்கியமாக, இந்த மதிப்பீடானது உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல், தரவுகளுக்கும் உண்மைகளுக்கும் முதலிடம் கொடுப்பனவாக இருப்பது அவசியம். இதுவே நாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செய்யும் தார்மீகக் கடப்பாடாகும். நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இந்த இருநூறாண்டுகள் என்பது ராஃபிள்ஸ் இங்கு வந்ததை விட, அவருடன் வந்த முதல் தமிழராகக் கருதப் படும் திரு நாராயணப் பிள்ளையின் வரு கையும் நவீன சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கினைப் பறைசாற்றும் முக்கிய வரலாற்று பயணமாகவும் கருதப்பட வேண்டும்.
இந்த இருநூறு ஆண்டுகளில் நமது இந்தியச் சமூகம் மற்ற இனத்தினரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் முன்னேறியுள்ளதா என்பதை உறுதி செய்ய நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டிய முதிர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நாம் முன்னேறியுள்ளோம் எனில், அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு நமது சமூகம் தொடர்ந்து வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சமூகமாக நாம் வரையறுக்க
வேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடு தழுவிய இருநூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் வெறுமனே கொண்டாட்டங்களாகவே இருந்துவிடப் போவதில்லை. மாறாக பல நிலைகளில் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை மீள்நினைவுகூரும் வாய்ப்புகளாக அமையவிருக்கின்றன. இந்தியச் சமூகத்தினரும், அதிலும் குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினர், நமது அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கான வரைவுத்திட்டத்தை இந்த இருநூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் போது மேற்கொள்ள வேண்டும். திட்டம் வரையப்பெற்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இந்த வரைவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத் திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளலாம்.
ஒரு தேசியத் திட்டமாக இருக்கும் பட் சத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளும் தங்களால் நாட்டு நிர்மாண வளர்ச்சிக்கு பங்காற்ற இயலும் – அதற்கான வாய்ப்பு களும் வீச்சும் இருக்குமளவிற்கு அந்த வரைவுத்திட்டத்தை திட்டமிட்டு அமைப்ப தில் நாம் அக்கறை காட்டவேண்டும்.
நாராயண பிள்ளை நமது சிங்கப்பூர்த் தமிழர்களுக்கான முதல் பிரதிநிதி எனில், அடுத்த நூறு ஆண்டுகளுக்குப் பின், நமது சமூகத்தின் குரலாக இருந்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. அவருடைய சமகாலத்தவர்களும் அவருக்குப் பின் வந்த இந்திய அமைச்சர்களும் பிரதிநிதி களும் தமிழர்களுக்காக அதிகமாகவே உழைத்துள்ளனர். இன்னும் பலர் உழைத்தும் வருகின் றனர். இவர்கள் யாவரும் பாராட்டிற்குரியவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இந்தத் தருணத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் நேர்கொண்டு எதிர்கொள்ள வேண்டும். ‘ஒரு சமூகமாக நமக்கு நாமே என்ன வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்துச் செயல்படலாம்?’. இன்றைய நிலையில் இக்கேள்விக்குப் பதில் இருக்குமா என் றால், நிச்சயம் உண்டு. அதிக அளவில் நாம் தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் பாரம் பரிய விழுமியங்கள் சார்ந்த திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம். இது போதுமா? என்பதே கிளைக் கேள்வி! நாராயண பிள்ளையின் காலகட்டத்து சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழவேளின் காலகட்டத்துத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தற்போதைய தமிழ்ச் சமுதாயத்திற்கும் இனிவரும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு காலகட்டமும் தனித்தன்மை வாய்ந்தது. மேலும், பிற நாடுகளின் தமிழ்ச் சமுதாயமும் நாமும் ஒன்றல்ல – ஒன்றுபோலத் தெரிந்தாலும் ஒன்றல்ல! சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்திற்கென்று நுண்ணிய வேறுபாடுகளுண்டு. இந்த வேறுபாடுகளே நமது தனித் தன்மையும் கூட! இவற்றை நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும். இல்லையெனில், நாமும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று பொதுவாக அடையாளம் காணப்படு வோம்! இதே சவால்தான் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட மற்ற இனத்தவருக்கும் இருக்கும் சவாலும் கூட! இந்த இருநூறாண்டுகளுக்கான கொண்டாட்டத்தின்போது நாம் ஒரு தெளிவையும் பெற வேண்டும். சிங்கப்பூர் இந்தியச் சமூகம் எவ்வாறெல் லாம் முன்னேறலாம் என்பதை வழி காட்டிக் கேள்வியாகக் கொண்டு, நிதர் சனமான உண்மைகளைக் கண்டறிய முற்பட வேண்டும். இந்தத் தேடல்கள்தான் இனிவரும் ஆண்டுகளில் இந்திய அமைச்சர்களை யும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தலைமைத்துவ முன்னோடிகளையும், கலை, இலக்கிய வட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரங்களையும் உருவாக்கத் துணை புரியும்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் நாராயண பிள்ளை போட்ட விதை இன்று சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாய மெனும் ஆலமரமாய் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. கற்பகத்தருபோல இனிவரும் தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த மரமா னது பலன் தரவேண்டுமெனில், இன்றே ஒரு சமூகமாக ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைகளுக்கு நற்பாதை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி செயல்பட வேண்டும்.