தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க குத்தகை வழங்கப் போவதில்லை என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பின்னர் மத்திய, மாநில அரசுகளின் பரஸ்பரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்கிறது.
தற்போது யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் 116 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 150க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, மீன்களைப் பிடிப்பதுடன், கடல் வளங்களையும் அழித்து வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவப் பிரநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க குத்தகை
இரு நாட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்பதற்காக இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு குத்தகை அடிப்படையில், இலங்கை அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று மீன் பிடிக்கும் திட்டத்தினை இந்திய-இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஆலோசித்தன.
இந்தியப் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும், இலங்கைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் குத்தகை அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்குவது நடைமுறையில் இருப்பதுதான்.
இது குறித்து இலங்கை வடமாகாண மீனவர்களின் கருத்துகள் அறியப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இந்நிலையில் கொழும்பு நாடாளுமன்றத்தில் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறியதாவது,
”இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்வதுடன், அவர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களின் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்ப அளிக்காததால், தமிழக மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க குத்தகை வழங்கப் போவதில்லை” என்றார்.