சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் சிங்கப்பூரும் மலேசியாவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 2026 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அந்த அதிவேக ரயில் தனது சேவையைத் தொடங்க உள்ளது. ஜோகூர் நீரிணைக்கு மேல் 25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் பாலத்தின் வழியாக இரு நாடுகளையும் இணைக்கும் இந்த ரயில் பாதை 350 கி.மீ. நீளம் கொண்டது.
எட்டு ரயில் நிலையங்களை இந்த ரயில் பாதை உள்ளடக்கும். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் முன்னிலையில் மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் நடந்த இரு நாட்டுத் தலைவர்களின் வருடாந்திர ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இந்த கையெழுத்திடும் நிகழ்வு இடம் பெற்றது. இந்த அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.