முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேற்கொண்ட முயற்சியால், சீனாவின் மான்ட்ரின் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது. கலாமின் நண்பரும், தைவான் நாட்டு கவிஞருமான யூசி குறளை மொழி பெயர்த்துள்ளார்.
சீன மொழியான மான்ட்ரினில் திருக்குறளை மொழி பெயர்க்க காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்பது பலருக்கும் தெரியாது.
தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி. ஆங்கிலத்தில் கவிதை, நாவல்கள் எழுதுவதில் வல்லவர். இயற்கை, சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றியும் எழுதி இருக் கிறார். கடந்த 2010-ம் ஆண்டு கவிஞர் யூசிக்கு, சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெ ற்றது. இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாம், கவிஞர் யூசியிடம் 2,200 ஆண்டுகளுக்கு முன்தமிழகத்தில் பிறந்து, உலகப் பொதுமறையை வழங்கிய திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பை வழங்கியுள்ளேன். இதனை தாங்கள் மான்ட்ரின் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
நண்பர் கலாம் சொன்னது கவிஞர் யூசியைத் தூங்கவிடவில்லை. இதற்காக, அவர் திருக்குறளின் பல்வேறு ஆங்கில உரை நடைகளை ஆழ்ந்து படித்தார். அறம், பொருள், இன்பத்தை பற்றி இரண்டிரண்டு வரிகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது, 2200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தின் மகிமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும், எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலும் குறள்கள் அமைந்திருப்பதை கவிஞர் யூசி உணர்ந்தார். இது மான்ட்ரின் மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார்.
2.12.2010 அன்று தைவான் நாட்டின் தலைநகர், தைபேயில் நடைபெற்ற 30-வது உலக கவிஞர்கள் மாநாட்டில் அப்துல் கலாம் முன்னிலையில், கவிஞர் யூசி திருக்குறளின் மான்ட்ரின் மொழி பெயர்ப்புகளில் சிலவற்றை வாசித்துக் காட்டினார். இதனை அங்கிருந்த அத்தனை உலக கவிஞர்களும், அறிஞர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
தொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ.41.70 லட்சம் நிதி ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக திருக்குறளை சீன மொழியில் மொழிப் பெயர்த்து புத்தகமாக வெளியிட 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த சீன மொழி பெயர்ப்புப் பணியும் கவிஞர் யூசியிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் 2014-ல் அச்சுப் பணிகள் நிறைவடைந்து புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. தமிழின் மிகப்பழமையான இலக்கிய நூலான திருக்குறள், இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தைபே மாநாட்டில் அப்துல்கலாம் முன்னிலையில், கவிஞர் யூசி திருக்குறளின் மான்ட்ரின் மொழி பெயர்ப்புகளில் சிலவற்றை வாசித்துக் காட்டினார்.