சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்ந்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் (லண்டன்) சென்ற 14-10-2018ம் தேதி லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா அப்பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது.
இலண்டன் பல்கலைக்கழகம் SOAS (School of Oriental and African Studies) தமிழ்க் கல்விக்கு மிகவும் பாரம்பரியமான இடமாக இருந்தது. 1916-இல் இருபது மொழிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில், தமிழும் ஒரு மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. 1920-களில் இலங்கையில் இருந்து வந்த தலை சிறந்த கல்வெட்டு ஆய்வாளர் டான் மார்டினோ டி சில்வா விக்ரமசிங்கே (Don Martino de Zilva Wickremasinghe) தமிழ் ஆசிரியராக இங்கு பணியாற்றினார் என்பது குறிப்பித்தக்கது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் ஆங்கிலேயத் தமிழறிஞர் திரு.M.S.H.தாம்சன் அவர்களும் இங்குப் பணியாற்றியுள்ளார். இப்படியாக சுமார் 75 வருடங்களுக்கு மேல் இயங்கி வந்த SOAS தமிழ்த்துறை, இங்கிலாந்து அரசின் நிதிக்கட்டுபாட்டாலும், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததாலும் 1995-2000 காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.
தமிழ் மேல் தீராக தாகம் கொண்ட ஐயா திரு. சிவா பிள்ளை தலைமை முயற்சியால் திரும்பவும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ, சென்ற சூலை 18, 2018 அன்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.
ஐயா திரு. சிவா பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரில் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். கடந்த 52 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். அங்கு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்ததுள்ளார். தமிழ் இணைய மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தி வரும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) – International Forum for Information Technology in Tamil (INFITT) என்ற அமைப்பை நிறுவியவர்களுள் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க பயணங்களை மேற்கொண்டு தமிழின் வளர்ச்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல தன்னாலான பங்களிப்பையயும், ஊக்குவிப்பையும் செய்து வருகிறார்.
தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா நாளன்று பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்புரையாற்றியவர் தமிழகத்தின் மக்களைக் கவர்ந்த பேச்சாளர் திருமதி.ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பாளர்களாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் திரு. இராமசாமி பாலாஜி அவர்களும், பத்மஶ்ரீ. மார் தம்பதியினரும், டாக்டர் பென் முரேக் அவர்களும் பங்கெடுத்தது சிறப்பித்தனர்.
இலண்டன் தமிழ்த் துறையை வெற்றிகரமாக உருவாக்க, சுமார் 100 கோடிகள் தேவைப்படுகிறது. இந்த நிதியை கொண்டு, துறைத்தலைவர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என முழுத் தமிழ்த்துறையையும் கொண்டு வருவதும், மாணவர்கள் தொடர்ச்சியாக வந்து படிக்கத் தேவையான குறைந்தபட்ச கல்வி உதவித்தொகைகளை உருவாக்குவதும், பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு இருக்கும் தமிழ் பனை ஓலைச்சுவடிகள் – பாரம்பரியப் புத்தகங்கள் போன்றவற்றை மின்னாக்கம் செய்வது மற்றும் கல்லூரி வளாகத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை சீர்படுத்திப் பராமரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் தோய்வின்றி நடைபெற நிதி உதவும்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை, மீண்டும் புத்தெழுச்சி பெற்று எழுவதற்குத் தமிழ் இருக்கைக்கையை அமைப்பதற்கும் மற்றும் தமிழ்த்துறைப் பணிகளை திறப்பட மேற்கொள்ள உலகம் முழுவதும் உள்ள தமிழ் மேம்பாட்டாளர்களை கொண்ட TamilChair-UK என்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒருங்கிணைத்து வருகிறது. தற்போது தமிழ் இருக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு. செலின் சார்ச் உள்ளார். தொடக்கத்தில் 10 நபர்களை கொண்டிருந்த இக்குழு தற்பொழுது 150 ற்கும் மேற்பட்டவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதி ஆதாரத்தை பெருக்க TamilChair-UK என்றக் குழு சார்பாக ஐயா திரு. சிவா பிள்ளை தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தமிழக அமைச்சரவை சகாக்களையும் தமிழக முதல்வரையும் சந்திக்க எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு நமது உலகத் தமிழர் பேரவை அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வரும் என்பதை அறுதியிட்டு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
மின்னஞ்சல்: tamilchairuk@gmail.com
இணையவழி: https://soas.hubbub.net/p/TamilStudies/