இந்திய உணவு மற்றும் வேளாண் வர்த்தக அமைப்பு சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த வேளாண் மாநிலத்துக்கான ‘உலக வேளாண் விருதை’ முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்திய உணவு மற்றும் வேளாண்மைக்கான வர்த்தக அமைப்பின் மூலம் வேளாண்மைக்கான சீரிய பங்களிப்பை நல்கும் தனி நபர், நிறுவனங்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளிக்கும் வகையில், ‘தேசிய வேளாண் விருது’ கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக் குழுவின் தலைவராக எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளார்.
தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள், குறிப்பாக கூட்டுப்பண்ணைய முறை, ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையம், உழவன் கைபேசி செயலி உள்ளிட்ட 11 சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊக்கப்படுத்தும் வகையில்…
இவற்றின் விளைவாக ஒரு கோடி மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக வேளாண் மற்றும் உணவு உற்பத்தி எட்டப்பட்டு, விவசாயிகளும் பலன் பெற்றுள்ளனர். இந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 2019-ம் ஆண்டுக்கான ‘உலக வேளாண் விருது’ க்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் கடந்த 5-ம் தேதி நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.