உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, விருப்பப்பாடமாக பிரெஞ்சு மற்றும் இந்தி வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்வாக அவர் விடுத்த அறிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியில் தமிழ் ‘வளர்ச்சித்துறை’ தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே மாறிவிட்டிருக்கும் அவலம் நேர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு அறிவியல் எனத் துறை தோறும் தமிழாய்வினை மேம்படுத்துதல், உலகத் தமிழறிஞர்களிடையே தொடர்பு கொண்டு நிறுவனமும், தமிழறிஞர்களும் பயன் கொள்ளும் நிலையில் தமிழ் ஆராய்ச்சியினை வளர்த்தல் போன்றவற்றை தலையாய நோக்கமாகக் கொண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இன்னொரு முக்கிய நோக்கம் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் என்பதே ஆகும்.
ஆனால், இந்த முக்கிய நோக்கங்களை அடியோடு சிதைத்துவிட்டு தமிழாராய்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தி பிரச்சார சபாவோடு இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தி கற்றுக் கொடுக்க முயல்வது ஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக் கம்பளம் விரிப்பது மட்டுமல்ல; கடைந்தெடுத்த துரோகச் செயலுமாகும்” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ விஜயராகவன், இந்தி கற்றுக் கொள்வது தற்போதைய காலத்தின் அவசியம் என்று குறிப்பிட்டார். தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியைக் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் உயர்மட்டத்தினருக்கே கிடைக்கிறது. தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் படித்து முடித்து வேலை தேடும்போது இன்னொரு மொழி தெரிந்திருப்பது உதவியாகத்தானே இருக்கும்? அதனால், ஒரு உலக மொழியையும் ஒரு இந்திய மொழியையும் கற்பிக்க முடிவுசெய்தோம்” என்றார்.
இந்திய மொழிகளில் மலையாளத்தைக் கற்பிக்கலாம் என, தான் பரிந்துரைத்ததாகவும் ஆனால், மாணவர்கள் இந்தியை விரும்பியதாகவும் தெரிவிக்கும் விஜயராகவன், வடநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள வாய்ப்புகளை இந்தி தெரியாததால் நம் மாணவர்கள் இழக்க நேர்கிறது என்றார்.
இந்த ஆண்டுதான் இந்தத் திட்டம் துவங்கியிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாக வேறு இந்திய மொழிகளும் சேர்க்கப்படும் என்றார்.
சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத் துவங்கியது.
பிபிசி