பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப் பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் மாவட்டத்திலும் அதையொட்டிய தருமபுரி மாவட்டத்திலும் நிலவும் சூழல் குறித்து முந்தைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். தற்போது அந்த சாலை தருமபுரியைக் கடந்து கிருஷ்ணகிரியில் சிறிது எட்டிப்பார்த்துவிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்த திட்டத்தின் 45 சதவீத நீளச்சாலை அதாவது 122 கிமீ தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிறது. இதற்காக 96 ஊராட்சிகளில் இருந்த 860 ஹெக்டர் விவசாய நிலம் மற்றும் 18 ஹெக்டர் வனப்பகுதி நிலம் கைப்பற்றப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலம் 155 ஹெக்டர் மற்றும் விவசாயிகளின் நன்செய் நிலம் 100 ஹெக்டர், புன்செய் நிலம் 605 ஹெக்டேரும் சாலைக்காக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை – விழுப்புரம் – ஆத்தூர் – சேலம் வழியாகவோ அல்லது சென்னை – வேலூர் – தருமபுரி – சேலம் வழியாகவோ சென்றால் ஒரு வாகனத்துக்கு ரூ.1000 வரை சுங்க வரி செலுத்த வேண்டும். அதேநேரம், சென்னை – தாம்பரம் – உத்திரமேரூர் – வந்தவாசி – திருவண்ணாமலை – அரூர் வழித்தடத்தில் சென்றால் சுங்கவரிக் கட்டணம் இல்லை. இது மொத் தம் 307 கிமீ தொலைவு கொண்டது. இதர 2 வழித்தடத்தை காட்டிலும் குறைவான தூரம்.

இப்போது புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தை விட 30 கிமீ மட்டுமே கூடுதலாகும். இந்த தொலைவுக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா. 3-வது வழித்தடத்தை விரிவாக்கம் செய்தாலும் சென்னை – சேலம் இடையே விரைவாக பயணம் செய்ய முடியும். கையகப்படுத்தப்படும் நிலத்தின் அளவும் குறைவாக இருக்கும். வனப் பகுதிகள் பாதிக்கப்படாது. திட்டத்தின் செலவும் குறையும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

நிதி இல்லை என்று கூறி திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை – செங்கம் – கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கத் திட்டம் கடந்த 4 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம் – திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக் கும் திட்டத்துக்கும் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை. இந்த 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், சென்னையில் இருந்து சேலத்தை எளிதாக சென்றடையலாம் என்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

“பசுமை வழிச்சாலை திட்டத்துக் கான 75 சதவீத நிதி உதவியை தனி யார் இரும்பு உற்பத்தி நிறுவனம் தர முன்வந்துள்ளது. அவர்களது இலக்கு கனிம வளங்களை வெட்டி எடுப்பதாகும். திருவண்ணாமலை அடுத்த கவுத்தி மலையில் உள்ள இரும்பு தாதுகளை 100 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கலாம். அதில் ரூ.1 லட்சம் கோடி லாபம் அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் கஞ்ச மலையில் உள்ள இரும்பு தாதுவை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரும்பு தாதுக்களை எடுக்கும்போது தொழிற்சாலை அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இரும்பு தாதுக்களை எடுத்து, கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்வது மட்டுமே நடைபெறும். கூலி வேலைக்குதான் ஆட்கள் தேவைப்படுவார்களே தவிர, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது.

வெட்டி எடுக்கப்படும் இரும்பு தாதுக்களை கொண்டு உலக அளவில் ராணுவ தளவாட பொருட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்மூலம் சர்வதேச சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் தனியார் நிறுவனம் லாபமடையும். அதற்காகவே அவர்களுக்கு ஆட்சியாளர்கள் துணை நிற்கின்றனர்” என்று குற்றம்சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள் .

சுற்றுச்சூழல் ஆர்வலரான வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு, அ.பிஞ்சூர், சொரக்கொளத்தூர், அல்லியாளமங்கலம், முன்னூர்மங்கலம், அனந்தவாடி மற்றும் ராவந்தவாடி காப்புக்காடுகள் அழிக்கப்பட உள்ளன.

விவசாய நிலங்களில் உள்ள மரங் கள் மற்றும் வனப்பகுதியில் உள்ள மரங்கள் என சுமார் 10 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். ஆனால் ஆட்சியர் கந்தசாமி, ‘குறைந்த எண்ணிக்கையில் மட்டும் மரங்களை வெட்ட உள்ளதாகவும் 277 கிமீ தொலைவுக்கு 3 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும், ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்கள் நடப்படும், கைப்பற்றப்படும் நிலத்துக்கு ஈடாக வனத்துறைக்கு மாற்று இடம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கிறார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டன. அந்த திட் டம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற் போது வரை சாலையின் இருபுறங்களிலும் மரங்களைக் காண முடியவில்லை. அதேபோல் சித்தூர் – கடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக எத்தனை மரங்களை நடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெப்பம் நிறைந்த பகுதி. 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். ஆனால் 16.8 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் மலைகளை குடைந்து, வனம் மற்றும் விவசாய நிலத்தை அழித்து சுரங்கம் வெட்டினால் எதிர்காலத்தில் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வறட்சி பகுதி என்பதால் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். வனவிலங்குகளின் உயிர் சங்கிலி அறுந்துபோகும்” என்றார்.

பசுமை வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் அழகேசன் கூறும்போது, “இந்த சாலை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கவில்லை. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களின் சுய லாபத்துக்காக மக்களிடம் திட்டத்தை திணிக்கின்றனர். இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் எடுப்பதற்காக சாலை அமைக்கின்றனர்.

8 வழிச்சாலையுடன் கவுத்தி மலையை இணைக்கும் ரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர், சேலம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் இணைப்புச் சாலைக்கு வழி அமைக்கப்பட உள்ளது. அதில், சாலையனூர் இணைப்பு சாலையுடன் நாயுடுமங்கலம் வழியாக இனாம்காரியந்தல் வரை தனிச்சாலை அமைக்க உள்ளனர். இனாம்காரியந் தல் கிராமம் எல்லையில்தான் இரும்பு தாதுக்களை கொண்டுள்ள கவுத்தி மலை – வேடியப்பன் மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6600 கோடியில் கொண்டு வரப்பட்ட 4 வழிச் சாலைத் திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கை விடப்பட்டது. அதனை புதுப்பித்து இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை என்ற பெயரில் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

கவுத்தி மலை மற்றும் கஞ்ச மலை யில் இருந்து இரும்புத் தாது எடுக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா உறுதி அளித்தார். மேலும் சட்டப்பேரவையிலும் 2014 ஜூலை மாதம் தெரிவித்தார். அவரது அறிவிப்பு அவைக் குறிப்பில் உள்ளது.

8 வழிச் சாலையின் இருபுறங்களி லும் மதில் சுவர் எழுப்ப உள்ளனர். இதனால் ஒரு கிராமம் இரண்டாக பிளக்கப்பட்டு தொடர்பு இல்லாமல் போய்விடும். விவசாய நிலமும் இரண் டாக பிளக்கப்படுவதால், வாழ்வாதாரம் இருக்காது. ஆட்சியரின் அறிவிப்புப்படி 2,125 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதன்படி, கையகப்படுத்தப்பட உள்ள விவசாய நிலங்களில் 70 சதவீதம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளதாக வேளாண் மைத்துறை தெரிவிக்கிறது. சாலைக் காக கைப்பற்றப்படும் நிலங்களை இழக்கும்போது, ஒரு போகத்துக்கு 4,725 டன் அரிசி உற்பத்தி அழிக்கப்படுகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஒரு கிணற்றை அமைக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை விவசாயி செலவு செய்கிறார். ஆனால் இந்த சாலை திட்டத்தால் 700 முதல் 1000 கிணறுகள் அழிக்கப்படவுள்ளன. விவ சாய நிலங்களின் சர்வே எண்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கவில்லை. கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே செங் கம் அடுத்த நீப்பத்துறையில் அளவீடு பணியை தொடங்கி விட்டனர்” என்றார்.

திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அனந்தசயனம் கூறும்போது, “8 ஏக்கர் நிலத் தில் அரிசி சாகுபடி செய்வோம். இப் போது பசுமை வழிச் சாலையால் எனது விவசாய நிலம் இரண்டாக பிளக்கப்பட்டு, 4 ஏக்கர் மற்றும் 2 கிணறு பறிபோகிறது. எங்கள் பகுதி கிணற்று பாசனத்தை நம்பி உள்ளது. இரண்டும் கிணறும் பறிக்கப்பட்டால், மீதம் உள்ள நிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிரிட முடியாது. மேலும், நிலம் பிளக்கப்பட்டு நடுப்பகுதியில் சாலை செல்லும்போது இரண்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்” என்கிறார் வேதனையுடன்.

இதனிடையே பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார். அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் வரை கிடைக் கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நிலமே எங்களது வாழ்வாதாரம் என்று கூறும் பல விவசாயிகள் அரசு இயந்திரத்துக்கு முன்னால் நிலத்தை தக்க வைக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள் என பல விவசாயிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறுவது இதுதான். “ஒருவேளை வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தினால் சந்தை விலைக்கு ஏற்ப இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்” என்கின்றனர்.

அதாவது, கிராம சாலையோரத்தில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலம் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும் உள் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையை அருகே உள்ள ஒரு ஏக்கர் நிலம் ரூ.50 லட்சத்துக்கு கூடுதலாகவும் இருக்கிறது. அதற்கு ஏற்ப தொகையை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்தச் சாலை விளைபொருட்களை கொண்டு செல்லவா, கனிமவளத்தை எடுத்துச் செல்லவா விரைவான போக்குவரத்துக்கா என்ற கேள்விகளுக் கான விடையை, யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: