இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், அங்கு வைத்து துன்புறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக மீன்பிடிக்க சென்ற சுமார் 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்து சென்றனர். அவர்கள் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிடித்து செல்லப்பட்ட 68 மீனவர்கள் மீதும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது என புகார் எழுந்தது.

கொரோனா தொற்று காலம் என்பதால் மீனவர்களை நிற்கவைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை உடனடியாக மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிடிபட்ட தகவல் கேள்விப்பட்ட உடனேயே தமிழக முதல்வர், ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால் தற்போது வரை ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது, ஒன்றிய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு பேசி வருகிறது. அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் 68 பேரை ஜனவரிக்குள் மீட்டு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: