ரோஹிங்கிய இஸ்லாமியர்களை துரத்தியடித்த மியான்மர் நாட்டிலிருந்து இப்போது, தமிழைக் காப்பாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் தற்போது, 15 லட்சம் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள்.
வெள்ளையர்களின் காலனி நாடாக இருந்த அன்றைய பர்மா, 1948-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு அங்கே ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், தமிழ் மொழியும் மெல்ல மெல்ல அழிந்துவரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 1962-ம் ஆண்டு பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து அகதிகளாக தமிழகத்துக்கு தப்பி வந்த பர்மா வாழ் தமிழர்களுக்காக, சென்னை பாரிமுனையில் ‘பர்மா பஜார்’ உருவாக்கப்பட்டு சொற்ப வாடகையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சென்னையைச் சுற்றியுள்ள வியாசர்பாடி, சர்மா நகர், செங்குன்றம், பாடியநல்லூர் பகுதிகளில் பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ‘பர்மாவில் தற்போது தமிழ் மொழி அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், தமிழ் மொழியை வளர்த்தெடுக்க தமிழக அரசு உதவ வேண்டும்’ என்றும் கோரிக்கைக் குரல் எழுப்பி வருகின்றனர் ‘அகில மியான்மர் தமிழ் இந்து மாமன்றம்’ அமைப்பினர். அண்மையில் சென்னைக்கு வந்திருந்த இவ்வமைப்பினரைச் சந்தித்துப் பேசினோம்.
”இலங்கை, மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் எங்கள் நாட்டில் இல்லை. வயதானவர்களில் ஒருசிலர் மட்டும்தான் தமிழில் பேசவும் எழுதவும் வாசிக்கவும் அறிந்துள்ளனர். தற்போதைய தலைமுறையில் ஒருசிலரால் தமிழில் தட்டுத்தடுமாறி, பேச மட்டும்தான் முடிகிறது; எழுதவோ, வாசிக்கவோ இயலவில்லை. எங்கள் பிள்ளைகளுக்கோ, ‘தமிழ் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுமோ…’ என்று பயமாக இருக்கிறது. எங்கள் தலைமுறைக்குப் பின்னும் எங்கள் நாட்டில் தமிழை வாழ வைக்க விரும்புகிறோம். அதற்குத் தமிழக அரசுதான் உதவி செய்யவேண்டும்” என்கின்றனர்.
தொடர்ந்து இவ்விஷயம் குறித்துப் பேசும் அந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகரன், ”தமிழக அரசோ அல்லது ஸ்பான்ஸர்களோ எங்கள் நாட்டில் தமிழ் பள்ளிகளை ஏற்படுத்தி தமிழ் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். குறைந்தபட்சம் கோடைக்கால விடுமுறையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள திறமை வாய்ந்த தமிழ் ஆசிரியர்களை மியான்மருக்கு அனுப்பிவைத்து சிறப்பு வகுப்புகளை தமிழில் நடத்தினால், எங்கள் நாட்டில் உள்ள மாணவ – மாணவியருக்கு தமிழ் பிழையில்லாமல் பேச, எழுத, வாசிக்க உதவியாக இருக்கும். இல்லையென்றால், மியான்மரில் இனி தமிழ் மெல்லச் சாகும் நிலை ஏற்படும்” என்று உணர்ச்சிவசப்பட்டவர், தொப்புள்கொடி உறவுகளான மியான்மர் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுச் சொந்தங்களுக்குமான போக்குவரத்து வசதி குறித்தும் நம்மிடம் பேசினார்.
”இப்போது நாங்கள் மியான்மரில் வாழ்ந்துவந்தாலும், சில தலைமுறைகளுக்கு முந்தைய எங்களது மூதாதையர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்தான். அந்தவகையில், எங்களது சொந்தங்களையும் உறவுகளையும் தமிழகம் வந்து பார்த்துச் செல்ல ஆசையாக இருக்கிறது. ஆனால், மியான்மரிலிருந்து நேரடியாக சென்னைக்கு விமான வசதி இல்லை.
இதுமட்டுமல்ல.. உலகின் சிறந்த மருத்துவ சிகிச்சை வசதியும், கல்வியும் சென்னையிலேயே கிடைத்துவரும் இந்தச் சூழ்நிலையிலும்கூட நாங்கள் கல்வி, வணிகம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குத்தான் சென்று வருகிறோம். மியான்மரிலிருந்து சென்னைக்கு நேரடி விமானப் போக்குவரத்து வசதியை இந்திய அரசு செய்துதந்தால், எங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
எங்கள் நாட்டிலிருந்து கொல்கத்தா மற்றும் டெல்லிக்கு வாரத்தில் 3 நாள் விமான சேவை உண்டு. ஆனால், அந்த விமானங்களில் வட இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் பர்மியர்களுமே அதிக அளவில் வந்துசெல்வதால், டிக்கெட் கிடைக்கப்பெறாமல் தமிழர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவருகிறோம்” என்கிறார்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக தமிழக அரசியல் தலைவர்களையும் இக்குழுவினர் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசும் பர்மா – தமிழக ஒருங்கிணைப்பாளர் பொன்மணி பாஸ்கரன், ”மியான்மர் தமிழர்களுக்கு விமான சேவை செய்துதருவது குறித்தப் பணிகளை தமிழக அரசு நிச்சயம் முன்னெடுக்கும் என்றார் ஓ.பி.எஸ். மேலும், தமிழ் ஆசிரியர்களை மியான்மருக்கு அனுப்பி தமிழை வளர்த்தெடுப்பது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி கொடுத்துள்ளார். மியான்மரில் தமிழ் நூலகம் ஒன்றை தனது சொந்த செலவில் அமைத்துத்தருவதாக கனிமொழி கூறியிருக்கிறார்” என்றார் பெருமையுடன்!
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்து மியான்மர் வாழ் தமிழர்களிடையே தமிழை வளர்த்தெடுப்பதோடு, விமான சேவையையும் தொடங்கி உறவுப் பாலத்தையும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பம்.