இந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார், பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடா முயற்சியுடன் படித்து பி.காம் பட்டம் பெற்றார். இதையடுத்து, எம்.காம் படித்துக் கொண்டிருக்கும் போதே, வரதராஜபுரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி நிலையத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். அதிலும், பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்று துணை பொது மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இதுகுறித்து ராம்குமார், “25 பணி இடத்துக்கு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதில் இருந்து 75 பேரை தேர்ந்தெடுத்து, குரூப் டிஸ்கசன், பர்ஸ்னெல் இன்டர்வ்யூ எடுத்தனர். அதில் இருந்து 25 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்தனர். நாடு முழுவதுமே, இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கீடு செய்தனர். அந்த இடத்துக்குத்தான் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாட்டில் முதல் முறையாக, அதுவும் 21 வயதில் துணை பொது மேலாளராகப் பொறுப்பேற்க உள்ளது நான்தான். இது மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த வெற்றி” என்றார் மகிழ்ச்சி பொங்க. ராம்குமாரின் இந்த வெற்றி அவரது வீட்டில், மகிழ்ச்சியுடன் கூடிய நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்துள்ளது.