தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயற்கை எய்தினார்!

தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயற்கை எய்தினார்!

தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயற்கை எய்தினார்!

வெள்ளையாம்பட்டு சுந்தரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறந்த தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் என்ற நிலைகளில் பன்முகத் தன்மை கொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தார். தன்னுடைய தொடர்ந்த வாசிப்பின் காரணமாக தமிழில் புலமை பெற்று விளங்கியவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அறிஞர் தொடர்பு :

க. அப்பாத்துரையார், வீ. முனிசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், ம.பொ.சிவஞானம், வாணிதாசன், சுரதா உள்ளிட்ட பலருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். 1946இல் பகுத்தறிவாளரான இவர் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராகவும், பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இரா. நாகசாமி, இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், மா. சந்திர மூர்த்தி, ச. கிருஷ்ணமூர்த்தி ஆகிய அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர்.

பதிப்புப்பணி :

1963இல் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவக்கிய இவர், 1,100 நூல்களை இதுவரை பதிப்புத்துள்ளார். இவர் பதிப்புத்துள்ள நூல்களில் கல்வெட்டு, செப்பேடு, கோயில்கள் மற்றும் ஊர்களைப் பற்றியவை உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஓலைச்சுவடி, கல்வெட்டுத் துறைகளில் ஈடுபாடு உடைய இவர் பொது மக்களின் நலனுக்காகப் புதிய கருத்தினைச் சொல்லும் நூலாசிரியர்களையும், நூல்களையும் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். கல் சொல்லும் கதைகள், பெரியாரின் புரட்சி முகங்கள், குடந்தை என். சேதுராமன் ஆய்வுக் கட்டுரைகள், சர். பிட்டி. தியாகராயர் வாழ்வும் வாக்கும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு :

வெள்ளையாம்பட்டு சுந்தரம், உடல்நலக் குறைவால், சென்னை, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டில், (31 மே 2017) இயற்கை எய்தினார். பகுத்தறிவாளரான வெள்ளையாம்பட்டு சுந்தரம், ‘தன் இறப்புக்கு பின் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது’ என, தன் குடும்பத்தாரிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே, சடங்குகள் ஏதுமின்றி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘பதிப்புலகின் இழப்பு’ : ”இளமை காலத்தில், என் தந்தை கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவர். நேர்மை, எளிமை, கண்ணியத்துக்கு உரிய பதிப்பாளர். அவர் சிறிய வீட்டில், பெரிய சிந்தனைகளுடன் வாழ்ந்தார். தமிழை நேசித்ததால், வறுமையிலும், புன்னகைத்தபடியே இருந்தார். தமிழ் பதிப்பாளர்களின் தகவல் களஞ்சியமாக இருந்தார். வளரும் பதிப்பாளர்களை நேரில் சென்று வாழ்த்தும் பண்பாளர். 10 ஆண்டுகளுக்கு முன், ‘பபாசி’ இவருக்கு, “சிறந்த பதிப்பாளர்” விருது வழங்கி கவுரவித்தது. அவரது இழப்பு, பதிப்புலகின் இழப்பு. – காந்தி கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம்.

‘பதிப்பு துறையின் எளிய வழிகாட்டி’ – ”எங்கள் பதிப்பகத்தின் நிறுவனர் மெய்யப்பனாருடன் நெருங்கி பழகியவர். சாதாரண நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், சைக்கிளில் சென்று கவுரவிப்பார். சக பதிப்பாளர்களின் தரமான நுால்களுக்கும், நுாலக பதிப்பு வேண்டும் என, போராடியவர். பள்ளி குழந்தைகளுக்கு, ஏராளமான வரலாற்று நுால்களை அன்பளிப்பாக வழங்கியவர். பதிப்பு துறையின் எளிய வழிகாட்டி. அவர் இழப்பு, பதிப்பாளர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. – குருமூர்த்தி, மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்.

‘கடைசி வரை உழைத்தவர்’ – ”வெள்ளையாம்பட்டு சுந்தரம், பாவேந்தர் பாசறை என்ற, இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து, தமிழுக்காக உழைத்தார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். வரலாற்றுடன் தமிழை ஒப்பீட்டாய்வு செய்து, புதிய புதிய தகவல்களை வெளியிட வேண்டும் என்ற ஆசையில், கடைசி வரை உழைத்தார். – இளமாறன், செயலர், பாவேந்தர் பாசறை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: