அழிவின் விளிம்பில் வீர ராமநாதன் அரண்மனை!

அழிவின் விளிம்பில் வீர ராமநாதன் அரண்மனை!

அழிவின் விளிம்பில் வீர ராமநாதன் அரண்மனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துாரில் உள்ள, ஹோய்சாள மன்னன் வீர ராமநாதனின் அரண்மனை வாயில் மண்டபம், ஆடற்கலை மண்டபம் உள்ளிட்டவை அழிவின் விளிம்பில் உள்ளன.

கி.பி., 13ம் நுாற்றாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துாரில், ஹோய்சாள மன்னன் வீர ராமநாதனின், இரண்டாம் தலைநகரம் இருந்தது. அங்கு, அவனுக்கான அரண்மனையும் இருந்தது. அது, தற்போது கவனிப்பாரற்று, அழிவின் விழிம்பில் உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, வரலாற்று ஆய்வாளர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், 12 கி.மீ., தொலைவில், குருபரபள்ளியின் வலதுபுறம் அமைந்துள்ளது, சின்னகொத்துார். இந்த ஊரின் பழைய பெயர் தேவர்குந்தானி. இங்கு தான், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த, ஹோய்சாள மன்னன், வீரராமநாதனின் அரண்மனை இருந்தது.

கள ஆய்வு : சில நாட்களுக்கு முன், சின்னகொத்துார் பகுதியில், கள ஆய்வு செய்த போது, அரண்மனை உள்ளிட்ட வரலாற்று சான்றுகள், அழிவின் விளிம்பில் இருப்பதை அறிந்தோம். கி.பி., 1223 முதல், கி.பி., -1267 வரை, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரிக்கரை ஓரம் உள்ள பகுதிகளை, ஹோய்சாள மன்னன், வீர சோமேஸ்வரன் ஆண்டு வந்தான்.

அவன் ஆட்சிக்குட்பட்ட தமிழக பகுதியை, அவன் மகன், வீர ராமநாதனுக்கு பிரித்து கொடுத்தான். வீர ராமநாதன், முதலில் திருச்சியை தலைநகராக கொண்டும், பின், சின்னகொத்துாரை தலைநகராக கொண்டும், ஆட்சி செய்தான். அங்கு, அரண்மனை, கோவில் உள்ளிட்ட ஏராளமான கட்டுமானங்களை நிறுவினான்; அவற்றில், பல அழிந்து விட்டன.

தற்போது, அங்கு குந்தீஸ்வரர் கோவில், ஆடற்கலை மண்டபம், பெரிய நுழைவாயில், நவகண்ட சிற்பங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட சில சான்றுகள் மட்டுமே உள்ளன. குந்தீஸ்வரர் கோவில், தற்போது குஞ்சம்மா கோவில் எனவும், முன்னர், ஸ்ரீகைலாசமுடையார் கோவில் எனவும் அழைக்கப்பட்டது.

அதன் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று, கோபுர வாயில் என, பல நிலைகளை உள்ளடக்கி இருந்தது. அங்கு, சோழர்கள், ஹோய்சாளர்கள், விஜய நகர பேரரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. பல கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையும் பதிவு செய்துள்ளது.

முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில், சோழ பல்லவராயன் கொடுத்த, பொன் காசிலிருந்து வரும் வட்டி பணத்தில், அமாவாசை, மார்கழி திருவாதிரை நாட்களில் செய்ய வேண்டிய நிவந்தம் பற்றிய செய்தி உள்ளது.

அரசுக்கு வரி : மேலும், திருமணம் செய்ய, அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற, வித்தியாசமான செய்தியும் உள்ளது. அந்த கல்வெட்டுகள் அனைத்தும், தற்போது பாதுகாப்பற்ற நிலையிலும், சிதிலமடைந்தும் உள்ளன.

அங்குள்ள மண்டபத்தில், வலது கையில் வாளும், இடது கையில் செங்கோலும் தாங்கி நிற்கும் சிற்பம் உள்ளது. அது, வீர ராமநாதனின் சிற்பமாக இருக்கலாம். தற்போது, அப்பகுதியில், ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. மழைக்கும், வெயிலுக்கும் ஆடு, மாடுகள் தான் ஒதுங்குகின்றன. இதனால், சான்றுகள் அழிகின்றன.

எனவே, தமிழக தொல்லியல் துறை, இப்பகுதியை பாதுகாக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் ஆய்வு செய்து, அனைத்து சான்றுகளையும் ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பசிப்பிணி போக்கியவன் : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில், அத்திமுகம், நடசாலை, பெண்ணேஸ்வர மடம், ஓசூர் கோதண்டராமர் கோவில், தர்மபுரி கோட்டை கோவில் உள்ளிட்ட பகுதிகளில், ஹோய்சாளர்களின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

அவற்றில், குறிப்பிடும்படியான கல்வெட்டாக, பெண்ணேஸ்வர மடம் கல்வெட்டு உள்ளது. காரணம் அதில், ‘யாராவது சோற்றை பிச்சையாக கேட்டால், அவர்களின் கழுத்தை அறுத்து விடவும்’ என்னும், வீர ராமநாதன மன்னனின் அரசாணை உள்ளது. அவன், பசிப்பிணி போக்கியவன் என்பதை, வரலாறு உரைக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>