குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரித்த கழிவுநீரை, லாரியில் கொண்டு வந்து, கிருஷ்ணா கால்வாயில் விட்ட டிரைவருக்கு நீதிமன்றம் அபராதமும், 10 பனை விதைகளை நடடும்படியும் நூதன தண்டனையை வழங்கியது. அதன்படி, அரசு அதிகாரிகள் முன்னிலையில் லாரி டிரைவர் பனை விதைகளை நட்டு தண்டனையை நிறைவு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. கழிவுநீர் லாரி டிரைவர். கடந்த 2018ம் ஆண்டு, தண்டலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை லாரியில் நிரப்பி எடுத்து சென்று, ஸ்ரீபெரும்புதூர் அருகே செட்டிப்பேடு பகுதி கிருஷ்ணா கால்வாயில் கொட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து டிரைவர் அன்புவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நூதனமான தீர்ப்பு ஒன்றை கடந்த மாதம் வழங்கியது. அதில், கழிவுநீரை கிருஷ்ணா கால்வாயில் விட்ட அன்புவுக்கு ரூ.1,200 அபராதமும், 10 பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் அன்பு, பனை விதைகளை நேற்று நடவு செய்தார்.
நன்றி :தினகரன்