சென்னையைச் சேர்ந்த ‘வள்ளுவக் குடும்பம்’ அமைப்பு திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. மணல் சிற்பங்கள் மூலம், இசையின் மூலம் திருக்குறளின் சிறப்பை மக்களிடத்து எடுத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு, நாட்டுக்குறள் என்ற நிகழ்ச்சியின் மூலம், நாட்டுப்புற பாடல் வாயிலாக திருக்குறள் கருத்துகளை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்தனர்.
இந்தாண்டு நடைபெறவுள்ள நாட்டுக்குறள் நிகழ்ச்சி குறித்து ஒடிசா மாநில தலைமை செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியது:
“திருக்குறளின் அழகு அதன் மதசார்பற்ற, உலகளாவிய கருத்துக்கள் தான். திருக்குறள் கூறும் கருத்துகளை தற்போதுள்ள நவீன தமிழர்களிடையே எடுத்துச் செல்வது தான் நாட்டுக்குறள் நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் அடைய விரும்புவது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சென்ற வருடம் நடந்த நாட்டுக்குறள் நிகழ்ச்சி நாட்டுப்புறப் பாடல்களையும், இன்பத்துப்பாலையும் மையப்படுத்தி நடைபெற்றது. இந்தாண்டு சற்று வித்தியாசமாக, முப்பாலையும் இதில் கொண்டு வந்துள்ளோம், அதுமட்டுமின்றி மூன்று வித இசையை இதில் சேர்த்துள்ளோம். அறப்பறை, பொருளிசை, ‘இன்பத்து பாப்’ என இதற்கு பெயர் சூட்டியுள்ளோம். இதற்கு, தாஜ் நூர் இசையமைத்துள்ளார், டிராட்ஸ்கி மருது ஒவியம் தீட்டியுள்ளார், நான் பாடல் வரிகளை எழுதியுள்ளேன். வள்ளுவர் தினமான ஜனவரி 15 இந்த பாடல்கள் ஒளிபரப்பப்படும்.
கடந்த ஆண்டு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் மணல் சிற்பத்தை மெரினா மற்றும் ஒடிசா பூரி கடற்கரையில் உருவாக்கினார். இந்த வருடம், இந்தியாவில் உள்ள நான்கு கடற்கரையில் இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு, ஒடிசா பூரி கடற்கரை, விசாகபட்டிணம், கோவா, மற்றும் கன்னியாகுமாரி கடற்கரைகளை தேர்வு செய்துள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
சென்ற வருடம் நடந்த நாட்டுக்குறள் நிகழ்ச்சியை பற்றி ஒரு சிறிய தொகுப்பு:
நாட்டுக்குறள் நிகழ்ச்சிக்கு தயார் செய்திருந்த அழைப்பிதழ் சற்று வித்தியாசமாக இருந்தது, எந்த ஒரு பாகுபாடுமின்றி சமத்துவத்தை கடைபிடிக்கும் அழைப்பிதலாக இருந்தது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், நீதிபதி மகாதேவன், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, மற்றும் தமிழ்செல்வன் கலந்துகொண்டனர். இவர்களிடையே, நாட்டுக்குறள் நிகழ்ச்சி, நிகழ்ச்சி நாயகன் திருவள்ளுவரையே சற்று உயர்த்திப்பிடித்தது.
சரியாக 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், திருக்குறள் இன்பத்துப்பால் தழுவிய ஏழு நாட்டுப்புறப் பாடல்கள் இசையமைப்பாளர் தாஜ் நூரின் இசையிலும், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பாலகிருஷ்ணனின் வரிகளிலும், டிராட்ஸ்கி மருதுவின் ஓவியத்திலும் அரங்கேற்றப்பட்டது.