தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு

தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு
 
தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 178 ஆண்டுகள் பழமையான முன்னாள் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தமிழ்நாடு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் இறுதிக்கட்ட பணிகள் முடியாததால் பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகம் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கொரோனா சூழலைப் பொறுத்து இந்த அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு போலீஸ் அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:-

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு அப்போதைய முதல் கமிஷனராக பதவியேற்ற லெப்டினன்ட் கர்னல் பவுல்டர்சன் முதல் தற்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வரை சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. யாக பணியாற்றிய அதிகாரிகளின் படங்கள், பெயர், பதவிக்காலம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வீரதீரச் செயல்கள், மெச்சத்தகுந்த பணி என தமிழக போலீசாருக்கு கிடைத்த ஜனாதிபதி பதக்கங்கள், உள்துறை மந்திரி பதக்கங்கள், முதல்-அமைச்சர் பதக்கங்களும், கேடயங்களும், விருதுகளும் அருங்காட்சியகத்தை அலங்கரித்துள்ளன.

போலீசாரின் கம்பீரம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் போலீசாரும், சுதந்திரத்துக்கு பின்னர் தமிழக போலீசாரும் பயன்படுத்திய சீருடைகள், வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட வரலாற்று பொக்கிஷங்கள் போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

இதில் 1870-ம் ஆண்டு ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட்ட சீமை சைக்கிள் வண்டி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ராணுவ கேந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

போலீசார் பயன்படுத்திய கைத்துப்பாக்கிகள், அதிநவீன ஏ.கே. ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், வீரவாள், கூர்மையான ஆயுதங்கள் போன்ற தற்காப்பு ஆயுதங்கள், கைதிகளை கைது செய்ய பயன்படுத்தப்பட்ட கை விலங்குகள், லத்திகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட பண்டையகால கற்சிலைகள், போலீசாருக்கு பரிசாக கிடைத்த பதப்படுத்தப்பட்ட புலி உருவம், போலீஸ் இசைக் குழுவினர் பயன்படுத்தும் இசைக் கருவிகள், பேரிடர் காலங்களில் போலீசார் பயன்படுத்தும் மீட்பு உபகரணங்கள், தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் சாதனங்கள் போன்ற பல்வேறு பொருட்களும் அருங்காட்சியகத்தை அழகுபடுத்தி உள்ளன.

கலங்கரை விளக்கம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை, சென்னை போலீசாரால் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டது, சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற அரிய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களும், படங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் சிறைச்சாலை மாதிரி வடிவமைப்பு போன்ற ஒரு சில பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அருங்காட்சியகம் மூலம் விஞ்ஞான வளர்ச்சியால் தமிழக போலீஸ்துறை கடந்து வந்த பாதை, வரலாறு ஆகியவற்றை மக்கள் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். சென்னை மற்றும் தமிழக போலீசாரின் அறிவாற்றல், துணிச்சல் போன்ற பெருமைகளை அறியலாம். போலீஸ் பணிக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அருங்காட்சியகம் கலங்கரை விளக்கமாக திகழும் வகையிலும், போலீஸ்துறை மீதான மதிப்பை சமுதாயத்தில் உயர்த்தும் வகையிலும் அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பணியும் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜின் நேரடி கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
நன்றி :தினத்தந்தி
 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>