அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவையின் 15வது பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக முதல்வரை அழைக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகளை மட்டுமே அனுமதிப்பது என அறிவித்த அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடந்து வந்த கிராமங்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே அரசிதழில் வெளியாகி உள்ளது. ஆனாலும் ஆண்டுதோறும் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விண்ணப்பிக்கும்போது, மாவட்ட கலெக்டர் அதனை மாநில அரசின் அனுமதிக்காக பரிந்துரைத்து அங்கிருந்து அனுமதி பெற்ற பின்னரே ஆணை பிறப்பிக்கிறார். இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டரே வழங்க வேண்டும். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோருதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் ராஜசேகரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு போராட்டம் நடத்தி, நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று நடத்தி வருகிறோம். முந்தைய ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 600 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், தற்போது குறுகி 100க்கும் கீழ்தான் நடந்து வருகிறது.
எனவே, பொது இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த மாவட்ட கலெக்டர் அனுமதி தர வேண்டும். அதேபோல், மதுரை மாவட்டம் சக்குடியில் சில ஆண்டுகளாக தடைபட்டு இருக்கும் ஜல்லிக்கட்டை நடத்த அரசு, மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவேண்டும்’’ என்றார்.
நன்றி : தினகரன்