“தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சேதமடைந்த பெண் தலையாட்டி பொம்மையைச் சீரமைக்காமல், குப்பை போடும் இடத்தில் போட்டு விட்டார்கள். கலைகளை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தென்னகப் பண்பாட்டு மையத்திலேயே அதுவும் தஞ்சையின் பாரம்பர்யங்களில் ஒன்றான தலையாட்டி பொம்மையை இப்படி குப்பையில் வீசிவிட்டனர்” என வேதனையோடு புகார் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் கலைஞர்களும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
“தஞ்சாவூரில் 1986 ம் ஆண்டு தென்னகப் பண்பாட்டு மையம் திறக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களையும், கலைகளையும் வளர்ப்பதற்கும் அந்தந்த மாநிலத்தின் பாரம்பர்ய கலைகளும், பண்பாடும் அழிந்து போகாமல் இந்தியா முழுவதும் பரவச் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் கலைகளில் சிறந்து விளங்கும் தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் சலங்கை நாதம் என்கிற பெயரில் ராஜஸ்தான், மணிப்பூர், குஜராத் எனப் பிற மாநிலக் கலைஞர்களும், நம் தமிழகக் கலைஞர்களும் இங்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். தென்மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று தங்கள் மாநிலத்தின் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இதன் மூலம் கலைகளும் உறவுகளும் வளரும் என்பதே அரசின் நோக்கம். இந்தத் தென்னகப் பண்பாட்டு மையம் ஐஏஎஸ் அதிகாரியின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது.
கலைகளின் பொக்கிஷமான தென்னகப் பண்பாட்டு மையம் வளாகத்தில் கலைகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதனின் பரிணாம வளர்ச்சி, ஏர் பிடிக்கும் விவசாயி, பயிருக்கு நீர் பாய்ச்சும் விவசாயி அவருக்கு உதவியாக இருக்கும் விவசாயப் பெண்மணி என கலைகளையும் பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் அதிக அளவிலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் நுழைவாயிலில் தஞ்சைக்குப் பெருமை சேர்ப்பதும் பாரம்பர்யமுமான ஆண், பெண் தலையாட்டி பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இவை இயக்குநர் ஷங்கர் படத்தில் வருவதுபோல் பிரமாண்டமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் தற்போது பெண் தலையாட்டி பொம்மை சேதமடைந்து கீழே விழுந்து விட்டது. அதை சீரமைக்காமல் குப்பை போடும் இடத்தில் போட்டு விட்டார்கள். கலைகளை ஊக்கு விக்கும் இந்த இடத்தில் இப்படி கலை அம்சம் நிறைந்த தலையாட்டி பொம்மை சேதமடைந்து விழும் அளவுக்குக் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதோடு, விழுந்த பொம்மையைச் சீரமைக்காமல் குப்பையில் போட்ட தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாகத்தின் செயல்பாடு வேதனை கொள்ள வைத்துள்ளது” எனக் கலைஞர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
மேலும், “கலைகளைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இப்படி கலைக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏன் எனத் தெரியவில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் சேதமடைந்த பெண் தலையாட்டி பொம்மையைப் புதிதாக அமைத்து உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த டிசம்பர் மாதம்தான் சலங்கை நாதம் நடத்தப்பட்டது. இதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கி செலவு செய்து தென்னகப் பண்பாட்டு மையத்தைப் புதுபித்தனர். ஆனால், சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இப்போது பெண் தலையாட்டி பொம்மை சேதமடைந்திருக்கிறது. தென்னகப் பண்பாட்டு மைய வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் முழுவதும் பயன்படுத்தப்படாமல் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டுபிடித்து மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கலைகளையும் பாரம்பர்யங்களையும் கவனமாகக் காக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.