ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து 7 வயது தமிழக சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத ஊத்துமலையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன் ஸ்கேட்டிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு பாட்டத்தூர், இராமநாதபுரம் விலக்கு, மலையான்குளம் உள்ளிட்ட இடங்களில் 6 வேகத் தடைகளை கடந்து, செவல்குளம் விலக்கு பகுதியை 35 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த நேரத்திற்கு முன்னதாக 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்து, நியூஸ்லாந்தை சேர்ந்த 8 வயது மாணவன் ஜேம்ஸ் 6 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய ஸ்கேட்டிங் சாதனையை, 7 வயதே ஆன தமிழக மாணவன் ஆதவன் முறியடித்தார். உலக சாதனை படைத்துள்ள இந்த மாணவரை பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.