‘‘அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் ‘தமிழில்’ பெயர் பலகைகளை வைக்க வேண்டும்’’ என்று வேலூர் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், நிறுவனத்தின் பெயர் அவசியம் தமிழில் இருத்தல் வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் அரசாணையின்படி தமிழிலும், அடுத்ததாக ஆங்கிலத்திலும் மற்றும் பிற மொழிகளிலும் இடம்பெற வேண்டும்.
இவை முறையே தமிழ், ஆங்கிலம், பிறமொழி என 5:3:2 ஆகிய விகிதத்தில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது, 5:3 என்ற விகிதத்தில், ஒரே பெயர் பலகையில் அமைத்தல் வேண்டும். விதிமுறைகளின்படி, பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் உடனடியாக தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.