கொரோனா எங்களுக்கு வந்து விட கூடாது என்ற மருத்துவர் டெங்கால் இறந்தபோது, அந்த மருத்துவரின் உடலை கிராமத்தில் எரிக்க தடை விதித்த கிராம மக்கள்!

“கடைசியா எங்களிடம் தண்ணி கேட்டார்.. நாங்க கொண்டு வந்து தர்றதுக்குள்ளே இதயம் நின்னுபோச்சு. உடனே வென்டிலேட்டர் வைக்கப்பட்டும் பலனில்லை” என்று உயிரிழந்த டாக்டர் ஜெயமோகன் குறித்து தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். வேலை பார்க்கும் கிராமத்தில் ஒருத்தருக்கு கூட கொரோனா வந்து விடக்கூடாது என பாடுபட்டவர் டாக்டர் ஜெயமோகன். இவர் மரணித்து 4 நாள் ஆன போதும், தமிழக மக்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை!!

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் ரேயான் நகரை சேர்ந்தவர் டாக்டர் ஜெயமோகன். 30 வயதாகிறது. கல்யாணம் ஆகவில்லை. பிளஸ் 2-வில் மாநில அளவில் இரண்டாம் இடம் எடுத்திருக்கிறார். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் டாக்டர் சீட் கிடைக்கவும் அங்கு சேர்ந்து படிப்பை முடித்தார். டாக்டர் தேர்வில் ஜெயமோகன் 3-ம் இடம் பெற்று, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நற்சான்றும் பெற்றார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் வேலை பார்த்து வந்தார். பிறகுதான் தெங்குமரஹடாவுக்கு டிரான்ஸ்பர் வாங்கி சென்றார். ஆனால் இந்த பகுதிக்கு லேசில் சென்றுவிட முடியாது. காட்டின் வழியேதான் பயணம். நதியில் பரிசலில் பயணித்துதான் ஜெயமோகன் சேவையை செய்து வந்திருக்கிறார். பல நண்பர்களையும் தன்னைப் போலவே இதுபோல பணியாற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். திடீரென கடந்த 10-ந் தேதி காய்ச்சல் வந்துள்ளது. அந்நிலையிலும் லீவு எடுக்காமல் நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். மாஸ்க் அணிந்து மருத்துவம் பார்த்ததற்கு வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனஉளைச்சலுக்கும் ஆளானார் என்றும் சொல்கிறார்கள். ஒருகட்டத்தில் உடம்பு ரொம்ப முடியாமல் போகவும், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறுதியில் இறந்தார். டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில், வெள்ளை ரத்த அணுக்கள் ரத்தத்தில் வெகுவாக குறைந்த காரணத்தினால் ஜெயமோகனை காப்பாற்ற முடியவில்லை என்கிறார்கள் டாக்டர்கள். மகனின் மரண செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தாய் ஜோதி மணி துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. ஆனால் தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் இவர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று கருதி ஊருக்குள் எடுத்து வர மறுப்பு தெரிவித்தனர். பின்னர், அவர் கொரோனாவால் சாகவில்லை என்பதற்கு சாட்சியாக இறப்பு சான்றிதழ் காண்பிக்க, அதன் பிறகே ஊர் மக்கள் அனுமதித்தனர். மகன் இறந்த துக்கம் தாங்காமலும், கிராம மக்கள் எரிக்க மறுத்ததாலும் இவரது தாய் சாணிப் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து பதறிய அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரமடையில் தனியார் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு காப்பாற்றினர்.

டாக்டராக வேண்டும் என்பது ஜெயமோகன் கனவாக இருந்திருக்கிறது. படித்து முடித்ததும் அவர் நினைத்திருந்தால் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்திருக்கலாம் அல்லது தனியார் மருத்துவமனையில் கூட வேலை பார்த்திருக்கலாம். எங்கோ தெங்குமரஹாடா என்ற மலைக் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வலிய டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு சென்றார். பரிசல் மூலம் பயணம் என்றாலும் ஒருநாள் கூட நோயாளிகளை சந்திக்க தவறுவதில்லை. நோயாளிகள் மேல் இவர் காட்டும் அக்கறையே அலாதி. தனியார் மருத்துவமனையில் இவரது கடைசி நிமிடங்களை ஊழியர்கள் நினைவு கூர்ந்து கலங்குகிறார்கள். ” மிக நல்ல மனிதர். கொரோனா காலத்திலும் ஆக்டிவ்வாக, நல்லாதான் வேலை பார்த்துட்டு வந்தார். தீடீரென 3 நாளா காய்ச்சல். உடனே கொரோனா டெஸ்ட் எடுத்தோம். நெகட்டிவ்ன்னுதான் வந்தது. அப்பறம் டெங்கு என்று சொன்னார்கள். அதுக்கும் சிகிச்சை தரப்பட்டது. கடைசியா எங்களிடம் தண்ணி கேட்டார். நாங்க கொண்டு வந்து தர்றதுக்குள்ளே இதயம் நின்னுபோச்சு. திடீரென்று அவரது இதயத்துடிப்பு முடங்கிவிட்டது (Cardiac arrest). உடனடியாக ஐ.சி.யூ-வுக்கு மாற்றி வென்டிலேட்டர் வைத்தோம். ஆனாலும் பலனில்லை” என்கின்றனர்.

“எங்களில் ஒருவருக்குக் கூட கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக டாக்டர் நிறைய அறிவுரை சொன்னார். ஆனால் அவரே டெங்கு காய்ச்சலுக்கு இறந்துட்டதா சொல்றதை கூறுவதை ஏற்க முடியவில்லை” என்று மனம் கனத்து சொல்கின்றனர் கிராம மக்கள்.

ஜெயமோகன் உயிரிழப்பு குறித்து நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர், “கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தெங்குமரஹாடாவில் பணியாற்றிவந்த டாக்டர் ஜெயமோகன் தனக்கு உடல் சரியில்லை என சில தினங்களுக்கு முன் விடுமுறை எடுத்துக்கொண்டார். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் தொடர்பான சோதனை மேற்கொண்டதில் இரண்டுமே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரின் இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரித்து வருகிறோம்” என்றார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: