டிஎன்பிஎஸ்சியின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.. தகுதி பெற 45 மதிப்பெண்கள் தேவை!!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை  நடத்தப்படுகின்றன. ஆனால்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ காரணமாக திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை.

இதனிடையே தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.இந்நிலையில்  தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும்  தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் சென்ற 22-ந் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின்  அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

அதில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. புதிய முறைப்படி, தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு முன்பு  தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும்.அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து  தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது. மேலும் பெண்களுக்கான நியமனங்களில் 40 இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியான உடன், அதை நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: