தமிழ் வளர்ச்சி என்பது புலவர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் மன்றங்கள், தமிழ் இதழ்கள், தமிழ் சார்ந்த சமய நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அரசின் திட்டங்கள் ஆகிய பன்முகக் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது.
அரசின் ஊக்கமே முதன்மையான ஆக்கமாகும். குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தாய் தரும் ஊட்ட உணவு காரணமாகிறது. அரசின் அரவணைப்பே மொழி வளர்ச்சிக்குக் காரணமாகிறது. அரசின் திட்டங்கள் நன்கு செயற்படாவிட்டால், மொழி வளர்ச்சி தேக்கமடைகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
வாராது வந்த செம்மொழி நிறுவனம் நன்கு செயற்படவில்லை. ஆய்வாளர்களுக்கும் தொகுப்பூதியமே தருகின்றனர். காலமுறைச் சம்பளம் தரப்படவில்லை. சிறப்பு நிறுவனங்களான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழி நிறுவனம் ஆகியவற்றின் பணிகளும் நோக்கங்களும் தனித்தனியாக வரையறுக்கப்படவில்லை.
முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்குவது பல்கலைக்கழகங்களின் பணி. அதனைச் சிறப்பு நிறுவனங்களும் ஏற்பது நன்றன்று. ஒரு நிறுவனம் செய்யும் பணியையே மற்ற நிறுவனமும் செய்வது தனித்த நிறுவனத்தின் நோக்கம் எது என்பதைப் புலப்படுத்துவதில்லை.
மைசூருவில் உள்ள 60 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டு படியெடுப்புகளும் உலகெங்கும் மறைந்து வாழும் ஒரு லட்சம் ஓலைச் சுவடிகளும் அச்சேறும் நாள் எந்நாளோ? எனும் ஏக்கம் நீடிக்கிறது. அகழ்வாராய்ச்சி, அடிக்கடல் அகழாய்வு போன்ற பணிகளுக்கும் அரசின் பணஒதுக்கீடு மிகவேண்டும். இவை தேக்கமுற்ற பணிகளாக நீடிக்கின்றன.
தமிழில் கலைச்சொல் படைத்தாலும், முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரவில்லை. சமஸ்கிருதம், ஜெர்மானியத்தில் மட்டும் 14 பல்கலைக்கழகங்களிலும் இந்தியாவில் 7 நடுவண் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. தமிழுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
அசோகனின் 41 கல்வெட்டுகள் உலகப் புகழை வாங்கித் தந்தன. தமிழில் உள்ள 41 இலக்கியங்கள் (மேற்கணக்கு, கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள்) உலக மொழிகளில் அறிமுகமாகவில்லை. உலகப் பெருமொழிகள் அனைத்தும் கற்கும் வகையில் தமிழ் மாணவர்களை ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்பும் திட்டமும் அயல்நாட்டு மாணவர்களைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, உயர்நிலை தமிழ் கற்பிக்கும் திட்டமும் தீட்டப்படவில்லை.
உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கு இருக்கிறது. தமிழ்ச் சொல் ஊடாடாத உலக மொழி எதுவும் இல்லை என்பதுதான் அது. அதனால் மொழி ஞாயிறு பாவாணர் தமிழை உலகத் தாய்மொழி என்றார். உலகத் தாய்மொழி நாளை உலக மொழி உறவு நாளாக உலகத் தமிழ்ச் சங்கங்கள் கொண்டாட வேண்டும்.
தாம் வாழும் நாட்டில் உள்ள மொழியில் தமிழ்ச்சொல்லின் ஊடாட்டத்தைக் காட்டுவது நட்பை வளர்க்கும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டலாம். தமிழ்க் கலையும் பண்பாடும் உலக மக்களை ஒன்று கூட வைக்கும் தன்மையுடையன.
ஜப்பான் நாட்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் பட்டம் பெறும் முன் தன்னாட்டுக்கே உரிய நாட்டுப்புறப் பாட்டு, நாட்டுப்புற ஆட்டம், நாட்டுப்புற விளையாட்டு ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்னும் வழக்கம் இருந்ததாகக் கூறுகின்றனர்.
மண்ணின் மரபுகள் நாட்டின் அடையாளங்களாகின்றன. சீன நாகரிகம், எகிப்து நாகரிகம் ஆகியவற்றுக்கு உலக அருங்காட்சியகங்களில் தனித்த அரங்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. தொன்முது தமிழர் நாகரிகத்தை அடையாளப்படுத்துவதற்கு தனித்த தமிழர் வரலாற்று அருங்காட்சியகம் பெரிதாக அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ் மாணவர்களுக்குத் தமிழிலும் உலக மொழிகளிலும் தனித்த புலமையும் திறமையும் வளர, கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும். தேவையற்ற பிறமொழிச் சொற்களை நீக்கி, தமிழனைத் தமிழில் பேச வைப்பதற்காகச் செய்தி ஊடகங்களும் தொலைக்காட்சித் திரைப்பட ஊடகங்களும் பட்டிமன்றங்களும் ஏன் முன்வரவில்லை என்பது புதிராகவே உள்ளது.
திராவிடக் கட்சிகள் தோன்றிய காலத்தில் நமஸ்காரம் வணக்கமாக மாறிய வரலாறு எல்லோருக்கும் தெரியும். இன்றைய ஆங்கிலம் கலந்த தமிழ் நடையை நல்ல தமிழ் நடையாக மாற்ற ஏற்பாடுகள் தேவை. பேச்சுத்திறன், கட்டுரைத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கான முயற்சிகள் பள்ளி, கல்லூரிகளில் குறைவாகவே உள்ளன.
முன்பெல்லாம் பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் இருந்தன. இப்பொழுது உள்ள இலக்கிய மன்றங்கள் பட்டிமன்றங்களை மட்டும்தான் நடத்துகின்றன. தாய்மொழியைப் பிறமொழியில் இருந்து காக்க, விரைந்த நடவடிக்கை தேவைப்படும் நேரம் இது. ஊடகங்களுக்கு நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் கட்டாயம் தேவை.
அரசின் தமிழ்வளர்ச்சித் திட்டங்கள் இலக்கை எய்தியுள்ளனவா? என ஆண்டுதோறும் கண்டறிய காவிரி மேலாண்மை ஆணையம் போன்று தமிழ் வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவைப்படுகிறது. ஏனெனில் தமிழ் வளர்ச்சியில் ஆக்கத்தைவிட தேக்கம் மிகுந்துள்ளது. உண்மையிலேயே தமிழ் இலக்கியம் உலக மக்களை ஈர்க்கும் தன்மையுடையது. இந்திய ஒருமைப்பாட்டுக்கும் உலக மக்களின் ஒருமித்த புரிந்துணர்வுக்கும் உதவும் வல்லமை பெற்றது தமிழ் ஒன்றே.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஐ.நா. மன்றத்தில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்று வரியை மேற்கோள் காட்டிய போது நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அறிஞர் பலரும் அடையாளம் காட்டிய பின்னும் எந்தப் பல்கலைக் கழகமும் சிந்துவெளி தமிழர் நாகரிகத் தொடர்புகளை இணைத்து ஆராய்ச்சி செய்யும் புலத்துறையோ, இருக்கையோ அமைக்க முன்வரவில்லை என்பதும் ஒரு பெருங்குறையே.
தமிழ் வளர்ச்சி கண்ணுக்குத் தெரிந்தாலும் அது விரும்பிய இலக்கை எட்ட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் நோக்கமாகவும், தமிழறிஞர்களின் ஏக்கமாகவும் உள்ளது.
– பேராசிரியர் இரா.மதிவாணன்