மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் அருங்குணம், பாக்கம், சிலாவட்டம், மதுராந்தகம் நகரில் வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஜின்னா நகர் உள்பட பல பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் சார்பில் பள்ளிக்கு செல்லாமல், இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், மதுராந்தகம் ஒன்றியத்தில் 900 சிறுவர், சிறுமிகள் மற்றும் மாணவ – மாணவிகள் கணக்கிடப்பட்டு பள்ளி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிலாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலர் சுகாந்தம் தலைமையில் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஜெயசுதா முன்னிலையில் அலுவலர்கள், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து, சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நன்றி :தினகரன்