இலங்கை புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.60 லட்சம் அபராதம் அளித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, “எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலெக்டர் மற்றும் எஸ்.பி.-யிடம் மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கும் இதுவரை 5 முறை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, மீண்டும் கல்பிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை அதாவது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்த தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழக மீனவர்களை காரணமின்றி இலங்கை கடற்படை சிறைப்பிடித்து கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.