சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதுபோல பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை மாற்றி, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் ரகு கணேஷ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து ஆஜராகி, 57 வயதான மனுதாரர் ஸ்ரீதர் கடந்த ஓராண்டு 2 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். குற்றத்தில் மனுதாரருக்கு தொடர்பில்லை. ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்சை போலீஸ் நிலையத்தில் இருந்து மறுநாள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்ற போதும், பிறகு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்பட்டபோதும், அவர்கள் உடம்பில் எந்த காயமும் இருந்ததாக டாக்டரோ, மாஜிஸ்திரேட்டோ குறிப்பிடவில்லை.
அதேபோல், தங்களை போலீசார் தாக்கியாக டாக்டரிடமோ, மாஜிஸ்திரேட்டிடமோ ஜெயராஜும், பென்னிக்சும் கூறவில்லை. அதற்கு ஒருநாள் கழித்து, சிறையில் இருந்தபோது, அவர்களின் உடம்பில் காயங்களை டாக்டர் பார்த்துள்ளார். இந்த காயங்களுக்கு போலீசார் பொறுப்பாக முடியாது. இறப்பு 3 நாள் கழித்து நிகழ்ந்துள்ளது. ஜெயராஜ் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது அந்தரங்க உறுப்பில் இருந்து சீழ் வடிந்துள்ளது. அதனால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது. பென்னிக்சுக்கு மாரடைப்பு இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. ஆகவே, அவர்கள் உடம்பில் இருந்த காயங்கள், சாதாரண காயங்கள் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காயங்களுக்கும், மரணத்துக்கும் தொடர்பு இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. வழக்கை நடத்துதற்கு ஏதுவாக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரும் நோக்கில் மனு தாக்கல் செய்யவில்லை. குற்றம் நடத்த இடத்தில் ரகு கணேஷ் இல்லை என 3 சாட்சிகள் தெரிவித்துள்ளன. கடந்த 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இறந்ததற்கு, அவர்களுக்கு ரத்தக்காயங்களால் ஏற்பட்ட பக்க விளைவுகள்தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என வாதிட்டார்.
ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியே. செல்போன்கள் சி.டி.ஆர். ஆவணத்தின்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் இருந்துள்ளனர். ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்சை தாக்க முயன்ற அதிகாரிகளை தடுத்த சாட்சிகளான பெண் ஏட்டுகளை விசாரிக்கவில்லை. இவர்களுக்கு ஜாமீன் அளித்தால், பெண் போலீசாரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, தற்போதைக்கு இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தற்போதைய நிலையில், ஜாமீன் கோரிய ரகு கணேஷ், ஸ்ரீதரின் மேல்முறையீடு மனுக்களையும், 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை மாற்றி, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிய ரகு கணேசின் மேல்முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முறையிடவும் அனுமதி அளித்தனர்.
நன்றி : தினதந்தி