நிலங்களை தானமாக வழங்கியதாக தலைவாசல் அருகே 5 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

நிலங்களை தானமாக வழங்கியதாக தலைவாசல் அருகே 5 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

நிலங்களை தானமாக வழங்கியதாக தலைவாசல் அருகே 5 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர் தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுகளை கண்டிபிடித்துள்ளனர்.

இது குறித்து சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெரியார் மன்னன் ஆகியோர் கூறியதாவது:

தலைவாசல் அடுத்த தியாகனூரில் மலைமண்டல பெருமாள் கோயிலில் 5 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் 13-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 13-ம் நூற்றாண்டில் ஆறகழூரின் ஒரு பகுதியாக தியாகனூர் இருந்துள்ளது. 15-ம் நூற்றாண்டுக்கு பின்னரே தியாகனூர் என பெயர் பெற்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலை ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. 12-ம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் மகதை மண்டலத்தை ஆட்சி செய்துள்ளனர்.

இக்கோயிலின் வடக்கு சுவரில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த வாணகோவரையரின் கல்வெட்டில், ஆறகழூர் மலைமண்டல பெருமாள் ஆராதனைக்கும், திருப்பணிக்கும், முதலீடாக மகதை மண்டலத்தை சேர்ந்த தொழுதூரில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது.

இந்நிலத்தின் வருவாய் மூலம் மலைமண்டல பெருமாளுக்கு பூஜை, திருப்பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு அர்த்தமண்டபம் கருவறை நாளம் முதல் அதிட்டானம் வரை 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் மூன்றாம் ராஜேந்திரனின் கல்வெட்டு காணப்படுகிறது.

இதில், உள்ள செய்தியில், வாணகோவரையனின் ஆணைப்படி ஆத்தூர் பழம் பற்றில் இருந்த கல்பூண்டி என்ற ஊர் ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கிய ஊராக இருந்துள்ளது. அப்போது அது நடைமுறையில் இல்லாத காரணத்தால் மீண்டும் கல்பூண்டி என்ற ஊரின் நான்கு எல்லைகளையும் அளந்து அங்குள்ள நன்செய், புன்செய் நிலங்களை மீண்டும் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக கொடுத்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

குடிநீங்கா திருவிடையாட்டமாக இதை ராமசந்திர தேவர், மாகாயன் பேராயன், திருவேங்கடன் ஆகிய மூவர் எழுதிக் கொடுத்துள்ளனர். இவர்களில் திருவேங்கடன் பரம்பரையினர் இன்றும் ஆறகழூரில் வசித்து வருகின்றனர்.

இக்கோயிலின் கருவறை மேற்கு அதிட்டானத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. அதில், ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கும் அங்கு பணிபுரியும் நம்பிமார்க்கும், வைஷ்ணவ கண்காணிகளுக்கும் கல்லக்குறிச்சி வட்டத்தில் உள்ள பிள்ளை ஏந்தல் என்ற இடத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் திருநாமத்து காணியாக தானமாக தரப்பட்டுள்ளது என கல்வெட்டாகவும், செப்பேடாகவும் வெட்டப்பட்டதாய் இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கோயிலின் தென்புறம் உள்ள சுவரில் கி.பி. 1469-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. விஜய நகரபேரரசு காலத்தில் நரசிங்கராய உடையார், ஈஸ்வர நாயனார் என்பவவர்களால் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதில், 7 வரிகள் உள்ளன.

ஆத்தூர் கூற்றம் ஆறகழூர் மலைமண்டலபெருமாள் கோயிலை புதுப்பித்து தியாகசமுத்திரம் என்ற ஏரியை வெட்டி ஆறகழூரில் இருந்த கைக்கோளர்களையும், தேவரடியார்களையும் இங்கு குடி அமர்த்தி அவர்களுக்கு கல்லக்குறிச்சி பற்று ராயப்ப நல்லூரில் நன்செய், புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறை மேற்கு விருத்த குமுதத்தில் கி.பி.1503-ம் ஆண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு காணப்படுகிறது.

ஆற்றூர் கூற்றம் தியாகசமுத்திரம் மலைமண்டல பெருமாள் கோயிலில் பணிபுரிந்த வென்று மாலையிட்ட பெருமான் திருமலை அப்பன், வேங்கடத்துறைவார் பூதன் சறுக்காயர், ஆழ்வார் பூதான கரியவர் என்ற மூன்று பேருக்கு கல்லக்குறிச்சி வட்டம் நாரியப்பனூருக்கு மேற்கே ஏரியின் கீழ் நன்செய் நிலம் 1500 குழி நிலம் சர்வமானிய இறையிலியாக கொடுத்ததை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கோயிலின் நுழைவாயிலின் அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பலகை கல்லில் நான்கு புறமும் வெட்டப்பட்டுள்ளது. மகதை மண்டலத்து ஆற்றூர் கூற்றத்தில் உள்ள பெரியேரி என்னும் ஊரில் பெரியபெருமான் என்னும் பெருமாள் கோயிலையும் மடையையும் கட்டுவித்து அக்கோயிலுக்கு பூஜை செய்யவும், பூஜைக்கு எண்ணெய் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கவும், சங்கு, சேமக்கலம், சேகண்டி இசைப்பவர்களுக்கும் ஏரிக்கு அருகே நிலதானம் செய்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சூரியன் சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை காப்பாற்ற வேண்டும் எனவும், இந்த தானத்துக்கு அழிவு செய்பவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி கல்வெட்டாகவும் செப்பேடாகவும் பதிவு செய்யப்பட்டதாய் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. தொல்லியல் துறையினர் இந்தபகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: