சென்னையில் முதன்முதலாக திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா பப்ளிக் ஹாலை ரூ.15 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த பொதுநலனில் ஆர்வம் கொண்ட செல்வந்தர்கள் ஒன்று கூடி, மாநகருக்கான நிகழ்ச்சி அரங்கத்தை அமைக்க 1882-ம் ஆண்டு திட்டமிட்டனர். அந்த அரங்கத்தை அமைக்க அறக்கட்டளை (பின்னாளில் அது விக்டோரியா நினைவு அறக்கட்டளை என பெயர் மாற்றமடைந்தது) ஒன்று தொடங்கப்பட்டது.
அதன்மூலம், 1886-ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் பகுதியில் 3.14 ஏக்கர் பரப்பளவு இடம், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சியிடம் இருந்து பெறப்பட்டது. அங்கு ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் செலவில் இந்தோ-சாரசனிக் கட்டிடக் கலையில் மாநகர அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு 1887-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து ராணியின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில், இந்த அரங்கத்துக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் என பெயரிடப்பட்டது.
மெட்ராஸ் போட்டோகிராபிக் ஸ்டோர் நடத்தி வந்த டி.ஸ்டீவன்சன், 10 குறும்படங்களை வைத்திருந்தார். அவற்றை 1896-ம் ஆண்டு காலகட்டத்தில் விக்டோரியா ஹாலில்தான் திரையிட்டார்.
சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் அதற்கு உண்டு. 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பாரம்பரிய கட்டிடம் என பெயர் பெற்ற விக்டோரியா பப்ளிக் ஹாலில் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபபாய் படேல், கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட ஆளுமைகளும் உரையாற்றியுள்ளனர்.
இந்த அரங்கத்தை நடத்தி வந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட குத்தகை காலம் முடிந்த நிலையில், நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, கடந்த 2009-ம் ஆண்டு அந்த அரங்கம் மாநகராட்சி வசம் வந்தது. அதன்பின்னர் பழமை மாறாமல் அந்த அரங்கை ரூ.3 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதன் வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதால் அரங்கம் சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
மெட்ரோ ரயில் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் அந்த வளாகத்தில் புல் தரைகள், பூச்செடிகள், இணைப்புக் கற்களுடன் கூடிய நடைபாதை, பாரம்பரிய விளக்குகள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. விரைவில் அரங்கத்தையும் புதுப்பிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி, ரூ.15 கோடியில் விக்டோரியா அரங்கத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அந்த அமைச்சகம் விரிவான திட்ட அறிக்கை கேட்டுள்ளது. இத்திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. விரிவான திட்டம் தயாரிக்க கலந்தாலோசகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.