2019 – 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளைப் பெற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு

2019 – 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளைப் பெற்றவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், டெல்லியில் 24.9.2021 அன்று நடைபெற்ற 2019 – 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருது வழங்கும் விழாவில், சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது பெற்ற ஆ.தேவராஜ், சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலகிற்கான விருது பெற்ற தூத்துக்குடி – காமராஜ் கல்லூரி சார்பில் முதல்வர் முனைவர் டி. நாகராஜன், சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான விருது பெற்ற சி. ஐய்யனார் மற்றும் ஜி.வி. நிதிஷ் ஆகியோர் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

சிறப்பாக பணியாற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் ஆண்டுதோறும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 24.9.2021 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருது வழங்கும் மெய்நிகர் விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியின் ஆ.தேவராஜ் அவர்களுக்கு விருது தொகையான ரூ.1.50 இலட்சம், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலகிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியின் சார்பில் அதன் முதல்வர் முனைவர் டி. நாகராஜன் அவர்களிடம் விருது தொகையான 2 இலட்சம் ரூபாய் மற்றும் கோப்பை, சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை, பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் சி.ஐய்யனார் மற்றும் சென்னை, ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மாணவர் ஜி.வி. நிதிஷ் ஆகியோருக்கு விருது தொகையான தலா 1 இலட்சம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, நாட்டு நலப்பணித் திட்ட சென்னை மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா, மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ம. செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: