பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!

பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!

பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!

சென்னை, போயஸ் கார்டன் – கஸ்தூரி அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

சைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர் ஷா வீட்டிலிருந்து 80-க்கும் அதிகமான சிலைகளைப் பறிமுதல் செய்தனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர். அதைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான அரண்மனை மற்றும் அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடத்தினார் பொன்.மாணிக்கவேல்.

இதையடுத்து, 100 ஆண்டுகளுக்குப் பழைமையான சிலைகள் யாரிடமாவது இருந்தால், அதை காவல் துறையினரிடம் ஒப்படைக்கச் சொல்லி அறிவுறுத்தினார் பொன்.மாணிக்கவேல்.

இந்நிலையில், ஆந்திராவில் கே.சி.பி சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் ஓர் இயக்குநராக ரன்வீர்ஷா இருக்கிறார். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா, சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி அவென்யூவில் இருக்கிறது. இன்று மாலை முதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இந்தப் பங்களாவில் ஆய்வு செய்து வருகின்றனர். பங்களாவின் தோட்டப்பகுதியில் சிலைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலையடுத்து, தோட்டம் முழுவதையும் தோண்டி ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள்.

இதுவரை மூன்று அடி உயரத்தில் ஒரு சிலையை மண்ணிலிருந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். ஐந்து அடி ஆழத்தில் மற்றொரு சிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், தொடர்ந்து மண்ணை அள்ளிவருகிறார்கள். அந்தச் சிலை ஏழு அடி உயரம் வரை இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து, அந்தப் பங்களா முழுதும் சிலைகள் இருக்கலாம் என்பதால் தொடர்ந்து சோதனை நடக்கும் என்று தெரிய வருகிறது. மேலும், மண்ணுக்கடியிலேயே 20-க்கும் அதிகமான சிலைகள் இருக்கிறது என்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: