`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் பிரபஞ்சன். தனது எழுத்துகள் மூலம் தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என மனித வாழ்வின் உன்னதங்களை, தரிசனங்களைத் தனது எழுத்துகளாக்கியவர்.

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 – டிசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். அவரது ‘வானம் வசப்படும்’ நாவலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட பிரபஞ்சன் சென்னையில் தன் வாழ்வின் வெகுநாள்களைக் கழித்தவர்.

பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995 ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.

உடல்நிலைக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்தவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படவே மீண்டும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உயிர் இன்று பிரிந்தது. தமிழ் எழுத்துலகுக்கு மிகப் பெரிய இழப்பு.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: