ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப்பெற வேண்டும் எனப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின்போது எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சிவக்குமார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி அளித்த தவறான தகவலால் தனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்குள் இதுதொடர்பாக சி.பி.ஐ பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியது.
மேலும், சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் `19 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 137-ஆவது பிரிவின்படி, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் நாடாளுமன்றம் உருவாக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாகும். 145-ஆவது பிரிவின்படி, எந்தவொரு தீர்ப்பளிக்கப்பட்ட உத்தரவையும் மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. கொலை வழக்கில் தொடர்பில்லை, அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே, 1999, மே 11- ம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நீதிசார் நலன் கருதி உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மார்ச் 14ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேட்டரி வாங்கிக் கொடுத்ததை விட கொலைச்சதியில் பேரறிவாளனுக்குப் பங்கு உள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரரான பேரறிவாளனுக்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குற்றவாளி இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை குறித்தும், தீர்ப்பு குறித்தும் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசினோம், “`ராஜீவ்காந்தி கொலை குறித்த பல்நோக்கு விசாரணைக்குழுவின் விசாரணை 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. அது உயிர்ப்புடன் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது காங்கிரஸோ, ராகுல் காந்தியோ அல்ல. 27 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் பேரறிவாளன்தான். ராஜீவ்காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து இதுவரை தாங்கள் எந்தப் புலனாய்வும் செய்யவில்லை எனவும் இலங்கையில் செய்யப்பட்டு கொண்டு வந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது எனவும் நீதிபதி ஜெயின் கமிஷன் முன்பு கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தினை ’Action Taken Report’ல் குறிப்பிட்டதன் அடிப்படையில் பல்நோக்குக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
அந்தப் புலனாய்வு முடிவுக்கு வந்தால் தன்னுடைய 27 ஆண்டுகால நிரபராதி போராட்டத்திற்கு விடியலாக அமையும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பேரறிவாளன். தான் வாங்கிக்கொடுத்த பேட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். இவ்வழக்கு தடா நீதிமன்றம், உயர்நீதிமன்றம் எனக் கடந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு SLP 10039 என பட்டியலிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், பேரறிவாளன் கடந்த 1999-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை திரும்பப் பெறக்கோரி இடைக்கால மனுவாக Recall application ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், ராஜிவ் கொலை சதி குறித்த விசாரணையைப் பல்நோக்கு விசாரணை குழு (MDMA) முடிக்கவில்லை. குண்டு தயாரித்ததாகக் கூறப்படும் இலங்கை அரசின் சிறையில் உள்ள நிக்சன் என்பவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு குழு தலைவர் கார்த்திகேயன், ராஜிவ் கொலைக்குப் பயன்படுத்திய வெடிகுண்டு இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டது எனக் கூறியுள்ளார். எனவே, பேட்டரி பொருத்தப்பட்டு எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியப்பாடு. மேலும் குண்டு வெடிப்பு சிதறல்களில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் புலனாய்வு அதிகாரி தியாகராஜனிடம் அளித்த வாக்குமூலத்தில் “எதற்காகப் பேட்டரி பயன்படுத்தப்பட போகிறது எனத் தெரியாது’ எனக் கூறியதை, எழுதாமல் விட்டுவிட்டேன். காரணம் அந்த வரிகளைச் சேர்த்தால் பேரறிவாளன் மீதான வழக்கு வலுவிழந்துவிடும் என்பதால் சேர்க்காமல் விட்டுவிட்டேன்’ எனவும் சொல்லி தியாகராஜன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் மனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்தார். எனவே, சதித்திட்டம் பற்றி தெரியாத என்னைக் குற்றவாளி என அறிவித்து 1999 மே மாதம் 11 ம் தேதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த மனு கடந்த 24.01.2018 அன்று விசாரணைவந்த போது சி.பி.ஐ. தரப்பின் ஆட்சேபணையைப் பொருட்படுத்தாது இதுகுறித்து அவர்கள் நான்கு வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், தேவைப்பட்டால் இதனைக் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு மாற்றவும் தயங்கமாட்டோம் எனவும் நீதியரசர் சொன்னார். இதுகுறித்து சி.பி.ஐ. 47 பக்கத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. சி.பி.ஐயின் பதில் மனுவில் 1999-ம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கூடாது எனக்கோரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 14.03.2018 அன்று நீதிபதி ரஞ்சன் கோகாய், பானுமதி, சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏறத்தாழ 2 1/2 மணி நேர விசாரணைக்குப் பிறகு, பேரறிவாளனின் இடைக்கால மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணையின் தொடக்கத்தில் சி.பி.ஐயின் வாதத்தின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர் என்பதால் வெடிகுண்டிற்கு ’power source’ என்பது பேரறிவாளனுக்குத் தெரியும் என நீதியரசர் கருத்துக் கூறினார். பின்னர், பேரறிவாளன் தரப்பு வாதத்தை கேட்டவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
அது மட்டுமல்லாமல் விசாரணை முடித்து 15.03.2018 அன்று உத்தரவாக வெளிவரும்போது “பேரறிவாளன் உள்நோக்கம் தெரியாமல்தான் பேட்டரிகளை வாங்கித்தந்தார்” என்ற சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத்தான் தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நோக்கமே தெரியாமல் வாங்கித் தந்தார் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும், 1999ல் வழங்கப்பட்ட தீர்ப்பை இந்த ’Recall Application’ என்ற இடைக்கால மனு மூலம் மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்கிறது நீதிமன்றம். இந்த நீதி அமைப்பு முறைக்கு எதிராகப் பேரறிவாளன் போன்ற ஏழை சாமானியன் போராடி நீதியை வென்று விடமுடியாது என்பதையும் அதிலும் ராஜீவ் காந்தி என்ற பேருருவம் தொடர்புடைய வழக்கில் சாத்தியமற்றது என்பதையும் நம்மால் உணரமுடிகிறது.
தீர்ப்பைப் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி போடப்பட்ட இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் பல்நோக்கு விசாரணை குழு (MDMA) தன் விசாரணை அறிக்கையினை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதிலாவது பேரறிவாளனுக்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பேரறிவாளன் கேட்கும் இந்த நீதி அவருக்கு மட்டுமானதல்ல ராஜீவ் காந்திக்கானதும்கூட’ என்றார்.
- விகடன்